கேள்வி-பதில் 03
"எழுத்தாளரே வாசகனாக இல்லை என்பதும் என் இன்னொரு குற்றச்சாட்டு. வாசிக்காத எழுத்தாளர்களையே நான் அறிவேன்"
எனது பதில்களுக்கு எழுத்தாளர் அஜந்தகுமார் அவர்கள் வழங்கிய எதிர்வினை
#பதில் -
அன்பின் சிவசேகரன்,
ஒரு படைப்பாளிக்கு விமர்சனம் ஊக்க மாத்திரை மட்டுமல்ல. அவனின் அடுத்த படைப்பிற்கான கூர்மைப்படுத்தலுக்கும் செம்மைப்படுத்தலுக்கும் உதவுவது ஆகும். படைப்பாளி பற்றிய துதிபாடல்களில் அர்த்தம் எதுவும் இல்லை. படைப்பாளி பற்றிய சேறுபூசல்களிலும் அர்த்தம் இல்லை. படைப்பாளியாக இருப்பது விருதுக்காகவோ புகழுக்காகவோ அல்ல இயங்குதலுக்காக உயிர்ப்புக்காக. உங்கள் பதிவில் சில கோளாறுகளைக் காணமுடிகின்றது. குருசீடமுறை இருக்கிறது என்கின்றீர்கள். குழுமனப்பாங்குதான் இருக்கின்றது. குழுவில் ஒருவர் படைப்பொன்றைப் பற்றிச் சொல்லும் கருத்தை அந்தப் படைப்பை வாசிக்காமலே மற்றவர்களுக்குச் சொல்லத் தொடங்கிவிடுகின்றார்கள். திரைப்படங்களைப் பார்க்காமலே திரைப்பட விமர்சனங்களை எழுதும் எழுத்தாளரையும் அறிவேன். நான் குப்பிழான் ஐ.சண்முகனின் மாணவர் என்பதற்காக இருவருக்கும் எல்லாப்படைப்புகள் பற்றிய கருத்துகள் ஒத்திருக்கும் என்பதும் அவரின் கருத்தையே எனது கருத்தாக சுமந்துதிரிவேன் என்பதும் நான் ஆசிரியருக்குச் செய்கின்ற துரோகம் என்றே கருதுவேன். சிவத்தம்பி கூறுவதுபோல நான் ஆசிரியரின் தோளில் இருந்து பார்க்கிறேன் எனது மாணவன் எனது தோளில் இருந்து இந்த உலகத்தை படைப்பை பார்க்கவேண்டும் என்பதே சரியானது.
வஎழுத்தாளராக இல்லாத எத்தனையோ அரிய வாசகர்களை நான் சந்தித்திருக்கிறேன். பத்மநாப ஐயர், குலசிங்கம் என்று இன்னும் எமக்குத் தெரியாத எத்தனையோ பேர் இருந்து கொண்டிருக்கிறார்கள். அண்மையில் செ.சுதர்சன் அவர்கள் எழுதியது போல இவர்கள் இரண்டாம் வகைப் படைப்பாளிகள். இவர்களுக்குள் ஒரு உயிர்ப்பான படைப்பாளி, விமர்சகன் இருக்கின்றான். எழுதினால் தான் கொம்பன் என்ற எண்ணம் எமக்கு இருக்க முடியாது. வாசகனே பிரதானமானவன் என்று நம்புகின்றோம். படைப்பின் ருசியை அறிவதுதான் எமது வேலை. அந்தச் செயல் ஒரு படைப்பின் மந்திரத்தன்மை பொருந்தியது. பல்வெறு சஞ்சாரங்களின் திறவுகோல்;தான் படைப்பு. படைப்பாளிக்குள் ஒரு விமர்சகன் இருக்கிறபோதுதான் அந்தப்டைப்பை நெறிப்படுத்த முடியும். எழுத்தாளர்களே வாசகர்களாக இருக்கிறார்கள் என்று அ.யேசுராசா முதலான பலர் என்று எழுந்தமானமாக எழுதுகிறீர்கள். ஆதாரத்துடன் ஒரு எழுத்தாளரை விமர்சிப்பதே ஆரோக்கியமானது. எழுத்தாளரே வாசகனாக இல்லை என்பதும் என் இன்னொரு குற்றச்சாட்டு. வாசிக்காத எழுத்தாளர்களையே நான் அறிவேன்.
00
த.அஜந்தகுமார்
#########
எனது பதில்-
வணக்கம் அண்ண.
உங்கள் பதில் கிடைத்தது; நான் எதிர்கொண்ட எதிர்வினைகளில் சிறப்பானதொரு எதிர்வினை உங்களுடையது. முதலில் என் நன்றி.
நீங்கள் என் பதில் மீது பிரதான இரு கோளாறுகளை சுட்டியிருந்தீர்கள்.
1. குரு-சீட இலக்கிய நகர்வு பற்றியது
2. வாசக அபிப்பிராயம் மீதான குற்றச்சாட்டு பற்றியது
இதில் முதலாவது குரு-சீட நகர்வு பற்றி நீங்கள் குறிப்பிட்ட நகர்வுக்கும் நான் குறிப்பிட்ட நகர்வுக்கும் தொடர்பு கிடையாது.
நான் குறிப்பிட்டது, குருமார் சொன்ன வாசிப்பு நிலை /வாசக நிலை பற்றிய கருத்து/எடுகோள்/முஸ்டீபுகளை அப்படியே சுமந்துவந்து இந்த நூற்றாண்டிலும் முன்வைக்கும் சீடர்கள் பற்றி.
அடுத்தது, குருவின் தோளில் அமர்ந்துகொண்டு உலகை / இலக்கியத்தை பார்ப்பதற்கும் குருவையே கொண்டாடுவதற்கும் வித்தியாசம் உண்டல்லவா... பலருக்கு குருவின் படைபுகளிலுள்ள குறைகளை விவாதிக்கும் / விமர்சிக்கும் திறன் இங்கில்லை. அதனையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
படைப்பாளியைக்கொண்டு படைப்பை மதிப்பிடும் மனநிலையை வளர்த்து விட்டதே இந்த குரு சீட இலக்கிய நகர்வே என்பது என் எண்ணம்.
இரண்டாவது, நிகழ்கால வாசிப்பு நிலை பற்றிய கருத்துகள். நிச்சயமாக நான் குறிப்பிட்ட கருத்தை நிகழ்கால இலக்கிய கூட்டங்களிலும் பொதுவெளி (முகநூல்) உரையாடல்களிலும்முன்வைக்கிற கருத்து நான் சொன்ன "எழுத்தாளார்களே வாசகராக இருக்கிறார்கள்" என்னும் கருத்து. நீங்கள் சொல்வதும் உண்மை; சில எழுத்தாளர்கள் வாசகர்களாக இல்லை. இதில் நான் அ.யேசுராசாவினை சுட்டியதற்கு இரண்டு காரணங்கள் உண்டு;
1. அவர் ஒரு எழுத்தாள-வாசக நிலைகளில் இயங்குவது
2. அவரே பொதுவெளியில் (சஞ்சிகை, பத்திரிகை, மேடைகள்) அதிகமாக "வாசிப்பு/வாசக நிலை பற்றி கருத்துரைப்பது.
அவரை முன்வைத்தே இளையவர்கள் பலரும் குறிப்பாக வேல்.நந்தகுமார், செல்வமனோகரன், கருணாகரன், இராஜேஸ்கண்ணன், சி.ரமேஸ், சி.விமலன் என ஒரு வட்டம் தம் கருத்துகளை முன்வைப்பதும் தாங்கள் அறிந்ததே.
நீங்கள் சொல்வது சரியே, எழுத்தாளர்களை கொண்டாடாமல் அவர் எழுத்தை மட்டு கொண்டாடிய, விமர்சித்த வாசகர்கள் பலர் இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள் (மறைந்த குமாரதேவன் நான் அறிந்த அதிசிறந்த வாசகர் என்பேன்)
இறுதியாக,
நானும் ஒரு சிறந்த வாசகனாக இருக்கவே விரும்புகிறேன். எழுத்தை கொண்டாடும்;விமர்சிக்கும் வாசகனாக.. நான் குறிப்பிட்டதைப்போல வாசகனின் கருத்தை/விமர்சனத்தை ஏற்றுக்கொண்டு; எதிர்வினை ஆற்றுகின்ற உங்களைபோன்றவர்களாகவும், வாசகர் மீதான தன்னிச்சை எடுகோள்களையும் மாற்றிய; வாசகனை மதிக்கிற எழுத்தாளர்களாகவும் மாறும்வரை, ஈழத்து இலக்கியப்போக்கு இதே தழம்பல் நிலையுடனே பயணிக்கும் சூழலே நிலவும்.
00
நன்றி
12.04.2020


கருத்துகள்
கருத்துரையிடுக