என்ர கத - 05
எஸ்.சிவசேகரன்
#
எங்கட பேர்
#
இந்தக்காலத்தில, பிள்ளயள்ள பேர்கள் வைக்கிற லச்சணம் என்னெண்டு நான் சொல்லித்தெரிய வேண்டியதில்ல. விஜய், அஜித், அனுஸ்கா, ஹம்சா எண்டு ஏதேதோ பேர் வைக்கினம். அந்தக்காலம் போல, சாத்திரியிட்ட போய் அவர் சொல்லுற எழுத்து வாற மாதிரிதான் பேர் வைக்கினம். ஆனா இப்பத்தய சாத்திரியள் ரொம்ப எக்ஸ்பேர்டான ஆக்கள்.
என்னத்தில? இங்கிலிசில.
ஏதோ வெள்ளக்காரனுக்கு பிறந்து, அவனிட்டயே சாத்திரம் படிச்சமாதிரி பம்மாத்து.
போன உடன நேரத்த, நாள கேட்டுப்போட்டு
3 நாளில் வரச்சொல்லி குறிப்ப குடுப்பினம். பிள்ளயின்ர பேர் முதல் எழுத்துகள் எல்லாம் எழுதியிருப்பினம். அதுவும் இங்கிலிசில.. எஸ்.எச் வாறபேர், சீ எச்வாற பேர் எண்டு சாத்திரி வெளுத்து வாங்கியிருப்பார். கொஞ்சம் சாத்திர அறிவு குறஞ்ச ஆக்கள் ஏன் இங்கிலிசு எண்டு கேட்டா, அதுக்கொரு பெரிய கதய இழுத்து விடுவினம்.
பிறகென்ன, அவர் சொன்ன எழுத்து வாற மாதிரி பேர நெட்டில தேடவேண்டியாதான்.
ஒருமாதிரி தேடியெடுத்தா, அது அந்தரத்தில நிக்கும். ந், ப், வ், ய், க் எண்டு முடியாம நிக்கும். கேட்டால் நான் தமிழன்; எங்களுக்கு தமிழ் தேசியம் வேணுமெண்டு கூவுறது. சரி அத விடுவம்
நீங்க, என்ர பேர் சிறப்ப கேளுங்கோ..
எங்கட குடும்பத்தில எல்லாற்ற பேரிலயும் ஒரு சிறப்பிருக்கு. அம்மாவுக்கு #காளியம்மா, அய்யாவுக்கு #சுந்தரலிங்கம், மூத்த அண்ணாவுக்கு #சோதி, மூத்த அக்காவுக்கு #அம்பிகை, சின்னண்ணாவுக்கு #சிவம் , சின்ன அக்காவுக்கு #மாரியம்மா, எனக்கு #சிவமயம். இதெல்லாம் வீட்டுல வெளியில கூப்பிடுற பெயர். இதில் என்ன சிறப்பு எண்டுதான யோசிக்கிறியள். இதைவிட இன்னொரு சிறப்பிருக்கு எங்கட பேரில;
அதென்னெண்டால்,
அய்யாவின்ர எழுத்துப்பெயர் சிவலிங்கம். அதில வாற #சிவ எண்ட சொல் ஆம்பிள பிள்ளயள் எல்லாருக்கும் வாற மாதிரி அய்யாவே எங்கள் மூண்டு பேருக்கும் பேர் வச்சாராம்.
மூத்தண்ணாவுக்கு #சிவபாலன், சின்னண்ணாவுக்கு #சிவநந்தன், எனக்கு #சிவசேகரன்.
அம்மாவின்ர எழுத்துப்பேர் அருந்ததி. அதில் வாற #அரு எண்ட எழுத்து வர மூத்தக்காவுக்கு #அருணாதேவி எண்டும், சின்னக்காவுக்கு #அருளமுதம் எண்டும் பேர் வச்சிருக்கிறார் அய்யா..
குறிப்பில சாத்திரி நல்ல தமிழ் பெயர்கள எழுதிக்குடுத்தும், அந்த பேர் ஒருத்தருக்கும் வைக்கல அய்யா.
இப்பிடி அரிதான, அழகான முறையில பேர் வைக்கிற முறை சிலருட்டத்தான் இருந்தது.
படிப்பறிவு குறஞ்ச அந்தக்கால ஆக்களுக்கு இருந்த சாமர்த்தியமான அறிவும் தமிழ்ப்பற்றும், காவாசிகூட இந்தக்கால பட்டதாரிகளுக்கு இல்லப்பாருங்கோ..
மற்றது,
எங்கட அய்யா அம்மாவயும் அம்மா அய்யாவயும் கூப்பிடுற பேர்.
இப்ப எல்லா தம்பதிமாரும் அவரவர் பேர சொல்லி கூப்பிடுகினம். இல்லாட்டி வாடா, வாடி எண்டுகினம். கேட்டால் அதுவும் பாஷனாம். அய்யா சாகுமட்டும் அப்பிடியேதான் கூப்பிட்டார் அம்மாவ.. அந்தப்பேர் "சோதி". என்ர மூத்தண்ணயின்ர பேர்.
இப்பிடியான அய்யாவ பற்றி சொல்லாம "என்ர கத" எப்பிடி வரும்?
அய்யாவ பற்றி நாளைக்கு சொல்லுறன்
00

கருத்துகள்
கருத்துரையிடுக