கேள்வி - பதில் 02
எழுத்தாளர் த.அஜந்தகுமாரின் முகநூல் கேள்விகளுக்கான பதில்கள்
#
எஸ்.சிவசேகரன்
#
கேள்வி - 2
படைப்புகள் தோன்றும் அளவுக்கு
வாசிப்பு இருக்கிறதா?
பதில் -
ஈழத்தை பொறுத்தவரை வாசிப்பு நிலை/ வாசக வட்டம் மீது அன்று முதல் இன்று வரை; அதாவது மேலைத்தேய புதிய அலையொன்று வீசத்தொடங்கிய 70கள், 80கள் தொடங்கி 2020 வரை எழுத்தாளர்களால் முன்வைக்கப்படுகின்ற ஒரு பொதுநிலைப்பட்ட கேள்வி இதுவாகும்.
பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி என மட்டும் தீவிரமாக இலக்கியம் பேசப்பட்டுவந்த அந்தக்காலத்தில் முன்வைக்கப்பட்ட இந்தக்கேள்வி
நவீனத்துவ வேகத்துக்குள்ளும் சமூகவலைத்தளங்களுக்குள்ளும் இலக்கியமும் வாசகரும் சிக்கித்தவிக்கும் இந்தக்காலத்தில் முன்வைக்கப்படுகின்றமை ஆச்சரியமில்லைதான்.
ஆனாலும், இந்தக்கேள்வியை ஒரு "சம்பிரதாய" கேள்வியாகவே என்னால் நோக்க முடிகிறது.
என் நோக்கிற்கு காரணங்கள் இரண்டு
1- இப்போதய ஈழ இலக்கிய போக்கு(ம்) குரு-சீட முறையில் நகர்ந்துகொண்டிருக்கின்றமை:
குரு-சீட முறை என நான் சுட்டுவது, இன்றய எழுத்தாளர்களில் பலர் மூத்த எழுத்தர்களின் சீடர்களாக இருப்பவர்கள். அதனால் குரு சொல்லும்/முன்வைக்கும் கேள்வியை அப்படியே ஏற்றுக்கொள்ளும்/பொதுவெளிக்கும் கொண்டுவரும் மனநிலை ஆகும். முன்னைய எழுத்தாளர்கள் முன்வைத்த இலக்கிய வாசக கொள்கைகள்/கேள்விகளை அவர்களின் சீடர்களும் அப்படியே காவிக்கொண்டு வாசகர்களை குறைமதிப்புச் செய்துகொண்டிருக்கிறார்கள்.
2- " எழுத்தாளர்கள் மட்டுமே இப்போது வாசகர்களாக இருக்கிறார்கள் "என்னும் அபத்தமான கருதுகோள்
இப்போது வாசக வட்டம் பற்றிய அதிகமாக சிலாகிக்கின்ற அ.யேசுராசா முதலான பலர் இந்த அபத்தமான கருதுகோளை மேடைகளெங்கும் காவிக்கொண்டு திரிகிறார்கள். இவர்களின் நினைப்பு "வாசகன்" என்பவன் இல்லை என்பதும்; இப்போது யாரும் வாசிப்பதில்லை என்பதுமாகும். இன்னொரு விடயம் இவர்கள் படித்த எல்லாவற்றையும் மற்றவரும் படித்தால் மட்டுமே அவர் வாசகர் என்னும் முடிபு.
இத்தகைய தான் தோன்றித்தனமான எழுத்தாளர்கள் மத்தியில் வாசக வட்டத்தின் மனநிலை எவ்வாறிருக்கும் என்பதை சிந்தித்துப்பாருங்கள்.
3.
வாசகனை கண்டுகொள்ளாத மேதாவித்தனம்
இங்கு பல எழுத்தாளர்களுக்கு தாம் ஏதோ வானத்திலிருந்து குதித்த தேவ எழுத்தாளன் என்னும் நினைப்பு. வாசகனின் கேள்விக்கோ, அவனது கருத்துக்கோ செவிமடுக்காத எழுத்தாளர்களை வாசிக்க எவ்வாறு வாசகன் நாடுவான்.
"உங்கள் புத்தகம் நான் படித்தேன்; நல்லா உள்ளது " என்னும் வாசகனை கைகொடுத்து வரவேற்க வேண்டாமா?
"நீ வாசித்தாலென்ன: வாசிக்காவிட்டாலென்ன " என்னும் மனநிலை .
ஆகமொத்தம், எப்போது எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் இடையிலான பெரியவர் சிறியவர் எனும் இடைவெளி இல்லாமல் போகிறதோ; எப்போது வாசகனின் விமர்சனங்களையும் கருத்துகளையும் எழுத்தாளர்கள் ஏற்று, எதிர்வினை புரிகிறார்களோ அப்போது வரை
இந்த சம்பிரதாய கேள்வி கேட்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கும்
"வாசிப்பு இருக்கிறதா? "
00
நன்றி..

கருத்துகள்
கருத்துரையிடுக