மொழியை வசப்படுத்தி அனுபவங்களை படிமப்படுத்தும் எஸ்.சிவசேகரன் கவிதைகள் -

மொழியை வசப்படுத்தி அனுபவங்களை படிமப்படுத்தும் எஸ்.சிவசேகரன் கவிதைகள் -
-அபூர்வன்-



 மூகத்தின் பதற்றத்தை ஆழமான புரிதலோடு தரிசித்து, நிதானமான மொழியிலேயே வெளிப்படுத்துபவனாக கவிஞன் இனங்காணப்படுகிறான். தேடலின் பேறான கொண்டாட்டத்தை அல்லது அடையப் பெறாமையின் வலியை கட்டிறுக்கமான மொழியிலே வெளிப்படுத்த முயல்கிறான். 
       அகத்தும் பிறத்தும் நிகழும் முரண் உறவை மொழி முகாமைத்துவத்தின் ஊடாக வாசகனில் தொற்றச் செய்துவிடுகிறான். கவிதைக்குள்ளே கட்புலனாகா தன்மையினையும் ( invisible ) கட்புலனாகும் தன்மையினையும் ஒருங்கே புதைக்கும் ஆற்றலோடு அமைகின்றான்.
       பிற துறைகளை போன்று கவிதையும் படிமுறை அடுக்குகளோடு அமைந்ததுதான்.
      நியூட்டனின் புவியீர்ப்பு விசையை கற்கும் மாணவன் புரிதல் முயற்சியில் அதனை கடந்தேகி, ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு மெய்மையை ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு பயணிக்கிறான். அதுபோல எளிமையில் இருந்து தீவிரத் தன்மைக்கு கவிஞனும் புலம்பெயர்கின்றான்.
     இப் பண்புக்கான சாத்தியங்களை எதிர்காலத்தில் நல்கும் தன்மையோடு எஸ்.சிவசேகரனின் கவிதைகள் ( மட்டை வேலிக்கு தாவும் மனசு ) காணப்படுகின்றன.
      குவாக் (Quark) துகள்களால் உருவான மனிதன் பேரண்டத்தில் காணாமல் போவதில்லை. கருந்துளையில் இறுதியாக பொருந்திப் போகிறான் என்று பௌதிகவியல் குறிப்பிடுகின்றது. இக்கருத்தியலின் மாற்று வடிவமாக சிவசேகரனின் சிந்தனைத்தளம் காணப்படுகிறது.

"நாளை
 என் தலையையும் தின்று
 இந்த மரணம்
 புளித்துப்போன ஏப்பம் விடும்
 அப்போதும் நான்
 உயிரோடுதானிருப்பேன்
 ஏதாவதொரு ரூபத்தில்"
                             எனக்குறிப்பிடுகின்றார்.

மொழியை வசப்படுத்தி அனுபவங்களை படிமைப்படுத்தும் ஆற்றல் இயல்பாகவே இவரிடம் அமைந்துள்ளது. 

"ஒற்றை கம்பியில்
 தொங்கிக்கொண்டு
 விம்மி விம்மி அழும் லாம்பு"
//

" விட்டகல மனமில்லாமல்
 இறுகப் பற்றிய படியே 
 சுவர் மீது
 தலைகாட்டும் சன்னங்கள்"


ஆகிய வரிகளில் கவிஞனுக்கு உரித்தான மிடுக்கான மொழி முகாமையினை தரிசிக்கலாம்.

      மரபுகளை இழத்தல், சமூக ஏற்றத்தாழ்வுகள், பேரரசியல் தந்த வடுக்கள் முதலான பல்வேறு அம்சங்களை கிராமிய வாசனை மிகு பேச்சு மொழியும் இடை  தூவலாக அமைய கவிதையினை நகர்த்திச் செல்கிறார். கவிதைகளில் கதைசொல்லல் முறையினையும் ( உரைநடை ) இனங்காண முடிகிறது. 
    மொழியை இன்னும் கடைந்து இருப்பின் வரிகளில் இறுக்கம் ஏற்பட்டிருக்கும் என்பது என் தனிப்பட்ட நம்பிக்கை.

    "சுட்டெரிக்கும் பகலவனின்
     நெருப்புக் கரங்களாய்"

என்ற தொடரில் சுட்டெரிக்கும், நெருப்பு கரங்கள் ஒரே அர்த்தப்பரிமாணத்தை தருவதால் ஏதாவது ஒன்றை தவிர்த்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.

      "வலைவிரித்தும் சிக்கவில்லை
       குளத்தில் குளிக்கவந்த
       நிலா"

என்னும் ஹைக்கூவில் குளிக்க வந்த என்னும் தொடர் மூடு மர்மத்தை முன்னரே கலைத்துப் போட்டு விடுவதால் ஈற்றடியில் நிகழவேண்டிய திடீர் தாக்குதல் நிகழாமல் போய்விடுகிறது.

      இத்தகைய நுண் தவறுகளை சீர்செய்து எதிர்காலத்தில் தனது கவிதை பயணத்தினை முன்னெடுத்தால் கவனிப்புக்குரிய ஒருவராக எஸ்.சிவசேகரன் மாறுவார் என்பதில் ஐயமில்லை.

00

-அபூர்வன்-

( ஜீவநதி- தை- 2020)





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈழத்து நவீன கவிதைமரபின் "புதிய மாஸ்டர்" கவிஞர் கருணாகரன்

எஸ்.சிவசேகரன் - கவிதை - அஷிராவின் மடியோடு தொலையும் காலம்