எஸ்.சிவசேகரனின் "போதிக்காடு" -பெரிய ஐங்கரன்

எஸ்.சிவசேகரனின் "போதிக்காடு"
-

புத்தனுக்கு ஞானம் கொடுத்த ஒற்றைப்போதிமரத்தை, பெரும்காடாக்கி நண்பனுக்கு பரிசளிக்கிறார் கவிஞர் சிவசேகரன்.
ஞானமடைவதற்குரிய வழிமுறையையும் நண்பனுக்குப் போதிக்கிறார்.

"நீ அறிவாயா
புத்தனாதல் மிக மிக இலகு
என்னோடு வா
என் வீடு அருகில்தான்
என் ஊரை விழுங்கிய
போதிக்காட்டையே
உனக்குப் பரிசளிக்கிறேன்
அமர்ந்து கொள்"

கவிஞன் பரிசளிக்கும் போதிக்காடு, ஒட்டுமொத்தமாக ஊரை விழுங்கிய பெரும் போதிக்காடு.
இந்தப் போதிக்காடு, வானுயர வளர்ந்து கிளைபரப்பிச் செழித்துப் பச்சைப்பசேலென குளிர்மையும் நிழலும் தரும் காடல்ல.
தரைமட்டமாய் விழுந்து தகிக்கும் சுடுகாடு.
இறந்த பின்னர் எல்லோரும் போகும்
சமரசம் உலாவும் சுடுகாடல்ல இது.
வாழும்போதே கொல்லப்பட்ட பொதுஜனங்களின் பாரம்பரிய வாழ்விடந்தான், இந்தச் சுடுகாடு.


போதிமரத்தில் ஒளி பெற்ற புத்தனை வழிபடும் பக்தர்கள், தீ மூட்டி எரித்த புனிதமான இடந்தான், இந்தச் சுடுகாடு.
போதி மரத்தில் பெற்றுக்கொண்ட ஒளியால் இவ்வூரை எரித்து ஒளியூட்டி குளிர் காய்ந்தார்கள்.
அதனால், "போதிக்காடு"
இவ்வூரின் காரணப்பெயர் ஆயிற்று.
இப்போதிக்காடு தரும் "ஞானம்" எத்தகையது?
ஞானம் பெற வந்த நண்பன்மீது கேள்விக்கணை பாய்கிறது. கேள்விகளை தொடுத்து, சிந்திக்க வைப்பதுதானே குருவின் யுத்தி.

"இறந்த குழந்தையைக் கண்டா
ஞானம் வந்துவிடப் போகிறது
அழுகிக் கொண்டிருக்கும் உடல்களைக்
கண்டா
ஞானம் வந்துவிடப் போகிறது"

இக்கேள்விகள் நெஞ்சை உலுக்கும் பாறாங்கற்கள்.
ஞானம் பெற நினைத்தவனை,
உன் மார்க்கம் அதற்குரிய வழி அல்ல என்று இடித்துடைக்கின்றன இக்கேள்விகள்.
இது சரியான மார்க்கமாயின் தேசத்தில் உள்ள அனைவரும் புத்தராக மாறியிருக்க வேண்டும்.
"பிச்சைக்காரனைப் பார்த்ததும்
ஞானம் பெறுதல் சாத்தியமென்றால்
தேசமெங்கும் புத்தர்கள்
நிரம்பியிருப்பார்கள்"
என்று அவனின் நடைமுறை மார்க்கம் இழிவானது என்பதை இக்கேள்விகள் நாசூக்காகச் சொல்லிவிடுகின்றன.
"அங்கங்கள் ஒவ்வொன்றையும்
இடுங்கி எடுத்து
தோசைக் கல்லில் சுட்டு வைக்கும்"
கொடூர நிலையினை மாற்றுவதே, அதற்கான முதற்படியாக இருக்கமுடியும், இருக்கவேண்டும் என்கிறது கவிதை.

"தோசைக் கல்லில் அங்கங்கள்"

சுட்டெரிக்கும் தோசைக் கல்லில் கிடத்தி உறவுகளை உயிரோடு வதைத்ததையும், அதை உண்டு பசி போக்கியதையும் உணர்த்தும் தீக்கடைக்கோல் இது.
இத்தகைய உணர்ச்சிக் கொந்தளிப்பான சூழலிலும் கவிஞர், எதிரியை நாகரிகமற்ற வார்த்தைகளால் அழைக்கவில்லை.
"நண்ப"
என்று அழைக்கும் போதும்,

"போதிகளைத் தேடி ஏன் நீ
பயணம் போகிறாய்"

என்று கேட்டும் போதும்
அவரிடம் நெக்குருகும் அன்பே வழிகிறது.
எதிரி மறந்த அன்பை வார்த்தைகளில் சொல்லாமல், வார்த்தைகளிற்கிடையில் சொல்லும் சாதுரியம் கவிஞனிடம் தெரிகிறது.

"என் ஊரை விழுங்கிய போதிக்காட்டையே
உனக்குப் பரிசளிக்கிறேன்"

இங்கு கவிஞன் கொடுக்கும் பரிசு
ஜனனப் பரிசல்ல, மரணப்பரிசு.
சுட்டு வீழ்த்தப்பட்டவனை தூக்கி எடுத்து, சுட்டவனுக்கே பரிசு கொடுக்கும் கவிஞனின் கவித்துவம் பிரமிக்க வைக்கிறது.
இதுதான் போதிக்காடு.
00

பெரிய ஐங்கரன்
13.07.2020 (சனிக்கிழமை)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈழத்து நவீன கவிதைமரபின் "புதிய மாஸ்டர்" கவிஞர் கருணாகரன்

மொழியை வசப்படுத்தி அனுபவங்களை படிமப்படுத்தும் எஸ்.சிவசேகரன் கவிதைகள் -

எஸ்.சிவசேகரன் - கவிதை - அஷிராவின் மடியோடு தொலையும் காலம்