எஸ்.சிவசேகரன்- கவிதை
###############
எங்கோ தொலைவில்
எவரோ ஒருவர்
"என்னால் மூச்சுவிட முடியவில்லை"
என்றதற்காய்
கைகள் உயர்த்திய என் தோழா!
கால்களில் மிதிபட்ட என் மாதா!
நீங்கள் எட்டிப்பார்க்கும் தூரத்தில்
என்
உரிமை பறிக்கப்பட்டபோதும்
உடமை எரிக்கப்பட்டபோதும்
கால்கள் முறிக்கப்பட்டபோதும்
கண்கள் இடுங்கப்பட்டபோதும்
குரல்வளை நெரிக்கப்பட்டபோதும்
குழந்தைகள் குதறப்பட்டபோதும்
கற்பு களவாடப்பட்டபோதும்
மார்பு அறுக்கப்பட்டபோதும்
குறியில் குண்டுவைக்கைப்பட்டபோதும்
குலமே கொன்றொழிக்கப்பட்டபோதும்
பாவம் உங்களுக்கு
கைகள் முளைக்கவில்லை
கண்கள் திறக்கவில்லை
நாக்கு வளரவில்லை என்னும் உண்மை
நேற்றுத்தான் எனக்குத்தெரியும்
மன்னித்துவிடுங்கள்
என்ன செய்ய
உங்களுடன் சேர்ந்து
ஊர்வலம் வர
எனக்கு கால்கள் இல்லை
கைகள் உயர்த்த
எனக்கு கைகள் இல்லை
குரல் கொடுக்க
எனக்கு நாக்கு இல்லை
மாளிகாவத்தை செருப்புகளும்
கெப்பட்டிப்பொல சுமணசேனவும்
என்னை மன்னிக்கட்டும்
உங்களுக்காய் நியாயம் சொல்ல
நான் மனிதன் அல்ல தோழா!
நான் மனிதன் அல்ல தாயே!
உங்கள் மொழியில்
நானொரு உருவழிந்த மிருகம்
00
எஸ்.சிவசேகரன்
08.30am - புதன்கிழமை

கருத்துகள்
கருத்துரையிடுக