அலறி - மழையை எனக்கு மொழிந்தவன்



மழையை எனக்கு மொழிந்தவன்
மழலை(யை) எனக்கு பொழிந்தவன்
#

இந்த சின்னப்பொடியனின் வெறும் பத்தாண்டுகால தீவிர இலக்கிய - வாசக அனுபவத்தில் (அதன் முன்னரே நான் பொழுதுபோக்கு வாசிப்பில் இறங்கிவிட்டேன்) ஈழத்து இல்லக்கியர்களில் பழமை தொடங்கி புதுமை வரை  பருமட்டாக 500ற்கும் மேற்பட்டவர்களை ( அச்சுப்புத்தகங்கள் & எண்ணிம புத்தகங்கள் - PDF) வாசித்துவிட்டேன்.

எனது ஆரம்பகாலம் தொடங்கி இன்று வரை கவிதை என் அபிமானத்துக்குரியதாக இருப்பதும்; இறுதிவரை கவிதையுடனே இருக்க வேண்டும் என்பதும் என் பாக்கியம்.

எனது தமிழாசான்களில் ஒருவரும் கவிஞருமான கலாநிதி சு.குணேஸ்வரனின் (கவிஞர் துவாரகன்) "மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்" தொகுப்பில் தொடங்கிய என் கவிதை வாசிப்பு, ஒவ்வொரு நாளும் 5 நல்ல கவிதைகளையாவது படித்தால்தான் நிம்மதியான உறக்கம் கிடைக்கும் என்னும் நிலைக்கு வந்து நிற்கிறது.

இந்த பித்துநிலைக்கு மூலகாரணம் என் ஆரம்பகால வாசிப்பில் முதலிடம் பெற்றிருந்த கவிஞர்கள் என்றால் மிகையில்லை. நான் தீவிர வாசிப்பில் இறங்கிய காலம் ஈழத்து கொடும்போரொலி நிசப்தமாகியிருந்த காலம். அதனாலோ என்னவோ என் வாசிப்பு போர்-வலி-புலம்பெயர்வு என பயணித்தது.

இப்பயணத்தில் எனக்கு வழிகாட்டியவர்கள் ஈழத்து போர்க்கால கவிஞர்களாக இனங்காணப்பட்டிருந்த சேரன் உட்பட வ.ஐ.ச, இரத்தின துரை, காசி ஆனந்தன், ஆழியாள், ஒளவை, ஊர்வசி, செழியன், சு.வி, சிவரமணி, அனார் எனப் பலருமே. இதனால் அவர்களின் கவிதைகளை- தொகுப்புகளை தேடவும் வாசிக்கவும் தொடங்கினேன்.

இவ்வாறு போய்க்கொண்டிருந்த ஈழத்து கவிதைகள் - அவற்றின் வளர்ச்சி பற்றிய வாசிப்பில் என் கண்ணில் பட்டதுதான் "அலறி" என்னும் புதுமைப் பெயர்.

அந்தப்பெயர் மீதான ஈர்ப்பினால், அந்தபெயர்க்காரரின் கவிதைகளை தேடத்தொடங்கினேன். காலப்போக்கில் அவரின் வாசகனானேன்.
மூன்றாவது மனிதனில், பெருவெளியில், சரிநிகரில் என அவரின் கவிதைகளை படித்தேன். அதன் பின்னர் அவரின் தொகுப்புகள் கேட்டு யாழின் எல்லா புத்தக கடைகளிலும் ஏறியிறங்கினேன். கிடைக்கவில்லை. அவரின் புதியகவிதைகளை படிக்க முடியவில்லை என்னும் ஆதங்கத்துடன் நாட்கள் கடந்தேகின. என் வாசிப்பு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது.

இவ்வாறு அலறியின் கவிதையோடு எனக்கிருந்து- அறுந்துபோன வாசகபந்தம் இந்த ஆண்டு முகநூல் மூலமாக மீண்டு தொடங்கியது. அவர் இப்போது ஒரு அரசியற்காரராக இருப்பதுகண்டு ஆச்சரியப்பட்டேன். இப்போது நான் படித்துவிட்டு உறங்கும் நல்ல கவிதைகளில் அலறி அவ்வப்போது எழுதும் 1 கவிதையும் சேர்ந்திருக்கிறது.

இன்று அலறிக்கு பிறந்தநாள் என்று முகநூல் சொல்கிறது. என் அபிமானக்கவிஞனுக்கு பிறந்தநாள்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் கவிஞரே!

வாழ்க நலமுடன்.
00

எஸ்.சிவசேகரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈழத்து நவீன கவிதைமரபின் "புதிய மாஸ்டர்" கவிஞர் கருணாகரன்

மொழியை வசப்படுத்தி அனுபவங்களை படிமப்படுத்தும் எஸ்.சிவசேகரன் கவிதைகள் -

எஸ்.சிவசேகரன் - கவிதை - அஷிராவின் மடியோடு தொலையும் காலம்