ஈழத்து நவீன கவிதைமரபின் "புதிய மாஸ்டர்" கவிஞர் கருணாகரன்
"போரின் சாட்சியிலிருந்து மௌனத்தின் அழகியல்வரை நீளும் கருணாகரனின் கவிதைப் பயணம்" ************* 01- க னடா தமிழ் இலக்கிய தோட்டம் வழங்கிவருகின்ற விருதுகளில்; கவிதைத் துறைக்கான விருது இந்த ஆண்டு கவிஞர் கருணாகரன் பெற்றுக்கொள்வதில் பெரும் மகிழ்வும் மன நிறைவும். இந்த விருது விடயங்களில் எப்போதும் நான் விமர்சனங்களையும் ஆதங்கங்களையும் முன்வைப்பவன். ஆனால் அவ்வப்போது தகுதியும் பொருத்தமும் கொண்டவர்கள் பெறும்போது மனம் நிறைந்த மகிழ்வும் அடைவேன். அவ்வாறானதொரு விருதுதான் கருணாகரன் பெறுகின்ற விருது. நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஈழத்து நவீனக் கவிதையின் பல பரிமாணங்களைக் கடந்து, தன் கவிதைமொழியைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருக்கும் ஒரே கவிஞர் அவர். தனிமனிதனின் இருப்பு, தனிமை,அவநம்பிக்கை, உறவுகளின் தேவை,சமூக ஒருமை மற்றும் மீளுகை சார்ந்து தன் கவிதைகளை எழுதி வரும் அவரின் எழுத்தின் பெறுமதியை இத்தனை ஆண்டுகால இலக்கிய - கவிதைப் பயணத்தை பின் தொடர்பவர்கள் அதை அறிவர். நவீன தமிழ்க்கவிதைக்கு வழங்கப்படுகின்ற உயர் விருதுகள் அனைத்துக்கும் தகுதியான ஈழத்துக்கவிஞர் என நான் கருணாகரனை சொல்வேன். (அவர் தான் தொடர் இல...