கவிதை - எஸ்.சிவசேகரன் -அஷிராவின் மடியோடு தொலையும் காலம்
தனிமை
000000
பூமியின் நிஷப்தத்தை விழுங்கி
மெல்லமெல்ல ஜீரணித்துக்கொண்டிருக்கும்
இந்த
நடுநிசி நிலவுக்கு
எனதும் உனதும்
தனிமையின் வலிதெரிய
வாய்ப்பில்லை அஷிரா..
நிலவு விழுங்கும் நிஷப்தத்தை
குலைத்துவிட
இலைகளின் காதோரம்
கவிதைசொல்லிக்கொண்டு
அதோ பார்
உல்லாசமாய் பறந்துபோகிறது
அந்த இரக்கமில்லாக் காற்று...
தனிமை வரமென்றும்
ஏகாந்தம் இனிமையென்றும்
சொல்லியவர்களை
என்னோடு சேர்ந்து
உனக்காகவும்
சபித்துக்கொண்டிருக்கிறது
உன்னைப்போல துணை இழந்த
காட்டான் குருவியொன்று
விரகதாப மோகவிம்சை
விஷத்தை பருக்கிவிட்டு
கவலைக்குள் முழுக்கி
கண்ணீரில் அவித்து
இரக்கமும் இரத்தமுமின்றி கொல்ல
நான்கு சுவருக்குள்
ஒரு நரகத்தை கட்டியாள்கிறது
நம் தனிமை..
சத்தமின்றி எவ்வாறு
அழுவது என்பதையும்
தனிமை நமக்கு
கற்றுத்தந்திருக்கிறது
எழுதி வை... ஒரு கவிதை
நேற்றைய என் தனிமையையும்
நாளைய உன் தனிமையையும்
கவிதையே சொல்லட்டும்
இந்த உலகுக்கு...
எஸ்.சிவசேகரன்
-2018

கருத்துகள்
கருத்துரையிடுக