எஸ்.சிவசேகரன் - கவிதை - அஷிராவின் மடியோடு தொலையும் காலம்


00000
எறும்புகளின் அடுக்குமாடிக்குடியிருப்பு
********

பதினைந்தாம் மாடியை
அஷிரா கட்டிமுடிக்கும்போது
நானும் அவளுடன்
கொத்தனாராய் இணைந்து கொண்டேன்..

ஒவ்வொரு மாடிக்கும்
ஒவ்வொரு வர்ணம் அடிப்பதென்று
எனக்கு நினைவூட்டிவிட்டு
தொடர்ந்து கட்டிக்கொண்டிருந்தாள்
அடுக்குமாடிக்குடியிருப்பை
எவ்வித சலனமுமற்றபடி..

பதினெட்டாம் மாடியினை
அவள் கட்டிமுடிக்கும் போது
முதலாம் மாடியில்
முண்டியடித்து ஏறிகொண்டிருந்தன
அன்பின் வாசனையை
மோப்பம் பிடித்துவந்த எறும்புகள்...

ஓ.. இப்போதுதான் புரிந்தது

நேற்றுக் கொட்டிய பேய்மழையில்
இரைதேடி அலைந்து திரிந்த
எறும்புகள் வீடுதிரும்ப
பட்ட தவிப்பையும்
அவற்றின் நிலக்கீழ் வீட்டுக்குள்
மழை புகுந்து மூடியதையும்
தாழ்வாரத்து மழைத்தண்ணீரை
ஏந்தி விளையாடிகொண்டிருந்த
அஷிரா கண்டிருக்கக் கூடும்..

அதோ
சிறகில்லாத பட்டாம்பூச்சி
கைகொட்டிப் பறக்கிறது பாருங்கள்..!

©எஸ்.சிவசேகரன்
-2018


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈழத்து நவீன கவிதைமரபின் "புதிய மாஸ்டர்" கவிஞர் கருணாகரன்

மொழியை வசப்படுத்தி அனுபவங்களை படிமப்படுத்தும் எஸ்.சிவசேகரன் கவிதைகள் -