லாக்டவுண் 07


கலங்காதே சுமனசேன
இது ஊழிக்காலமென்பதின்
ஒற்றை சாட்சியம் நீ..

உன் அழுகையின் அர்த்தம்
உணர்ந்தவன் சொல்கிறேன்
கலங்காதே சுமனசேன

கிருமிகள் ஆளும்
இந்த ஊழிக்காலத்தின் வெம்மையை
நாளை சொல்வதற்கு
உன் நிலையை விடவா
சாட்சியம் வேண்டும் சுமனசேன..

உனக்கு அடித்தவர்களை எண்ணி
நான் பரிதாபப்படுகிறேன்

ஏன் தெரியுமா சுமனசேன..?

என்னையும் உன்னையும்
துரத்திக்கொண்டிருக்கும் கிருமி
அவர்கள் எல்லோரையும்
எப்போதோ தொற்றி
அவர்களுக்குள் இருந்த மனிதனை
தின்று முடித்துவிட்டதை
இன்னமும் அறியாமலிருக்கிறார்களே..

கலங்காதே சுமனசேன
இது ஊழிக்காலமென்பதின்
ஒற்றை சாட்சியம் நீ..

உனக்கொன்று
தெரியுமா சுமன..?

இப்போது
உன் வீட்டை நிறைத்திருக்கும்
அரிசி மா பருப்பு சீனி
எல்லாவற்றோடும்
நீ திருடிய தேங்காய்களும்..

உன்னிடம்
மீதிக்கடன் கேட்டவனையும்
மன்னித்துவிடு சுமனசேன

எனக்குத்தெரியும்
அவன் குழந்தைகள் பசிக்காதிருக்க நிச்சயம் நீ
வேண்டிக்கொண்டிருப்பாய் என்று..

கலங்காதே சுமனசேன
இது ஊழிக்காலமென்பதின்
ஒற்றை சாட்சியம் நீ..
00

எஸ்.சிவசேகரன்
05.20pm

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈழத்து நவீன கவிதைமரபின் "புதிய மாஸ்டர்" கவிஞர் கருணாகரன்

மொழியை வசப்படுத்தி அனுபவங்களை படிமப்படுத்தும் எஸ்.சிவசேகரன் கவிதைகள் -

எஸ்.சிவசேகரன் - கவிதை - அஷிராவின் மடியோடு தொலையும் காலம்