லாக்டவுண்
01
யன்னல்கள் அல்லது
பைத்தியங்கள் ரசிக்கும் உலகம்
###
எங்களில் யாரோவால்
பைத்தியமாக்கப்பட்டு
பல்லாண்டுகளாய் தனித்திருந்தபடியே
ஒன்றுக்கு ஒன்று அளவுள்ள
ஓட்டைவழியே புகும் ஒளியினூடு
உலகை ரசித்துக்கொண்டிருக்கும்
ஒருவரைப்போல
ரசித்துக்கொண்டிருக்கிறேன்
எனது அறையின் யன்னல் வழி
கிருமி தொற்றிய உலகை..
மனிதர்களற்ற நகரங்களின் அழகை ரசித்தபடி
ஒரு குவியல் மேகத்தின்
அருகாகப் பறக்கும்
இருசோடிக் குருவிகளில்
ஒன்றின் முதுகில்
அமர்ந்துபோகும் என் மனசை
திருப்பி அழைக்கும்
நகரசபை வாகனத்தின்
அபாய அறிவிப்பை கேட்க
அடுத்த அறையில்
அடுத்த வீட்டில்
அடுத்த தெருவில்
அடுத்த ஊரில்
அடுத்த நகரில்
அவசரமாய் திறக்கப்படுகின்றன யன்னல்கள்
பைத்தியங்கள் உலகைக்காண
யன்னல் திறப்பதைப்போல...
00
எஸ்.சிவசேகரன்
12.10 pm
02
மரணத்தின் முகம்
#
குற்றங்களேதுமின்றி
வீட்டுச்சிறையிருப்பை தீர்பளித்த
கிருமியின் உருவத்தை
வரைந்துகாட்டுகிறாள் அஷிரா
தன் நாய்க்குட்டிகளுக்கு..
ஒவ்வொரு கோடுகளை வரையும்போதும்
கிருமியின் பலத்தை
வியாக்கியானித்துக்கொண்டிருக்கும்
அவளின் கைகளை மாறிமாறி
கட்டிக்கொள்கின்றன குட்டிகள்..
நடுங்கியபடியே கிருமியை
வரைந்து முடித்த
அவள் விரலில் துளிர்த்திருந்தது
பயத்தின் வியர்வை
கிருமியின் உருவத்தை பார்த்தபடி
அவளின் கரத்தை இறுக்கி
ஒன்றாய் பற்றிக்கொண்டிருக்கும்
குட்டிகளின் முகத்தில்
ஒட்டிக்கொண்டிருக்கிறது
மரணத்தின் முகம்
00
எஸ்.சிவசேகரன்
07.04.2020
06.15pm
03
கருணையின் கைகள்
#
முடக்கப்பட்ட ஊர்களுக்குள்
அனுமதிப்பத்திரத்தோடு
உள்நுழையும் முகமூடி மனிதர்களுக்கு
மூன்றடி இடைவெளியில்
கைகளை நீட்டியவர்களின்
கண்களில் தெரிகிறது மூன்று முகங்கள்
ஒன்று
நேற்றைய பசியின் முகம்
இரண்டு
நாளைய சிரிப்பின் முகம்
மூன்று
சொல்லித்தீரா நன்றியின் முகம்
விடைபெறும் நேரத்தில்
மூன்றடி இடைவெளியை துறந்து
ஒரு தாய் பரிசளிக்கிறாள்
பேரன்பின் முத்தங்களை
கருணையின் கைகளில்...
00
எஸ்.சிவசேகரன்
06.05am



அனைவருக்கும் சென்றடையட்டும். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள்
பதிலளிநீக்கு