என்ர கத - 06


எஸ்.சிவசேகரன்
#
அய்யா
#

எங்கட அய்யான்ர சொந்த ஊர் வல்வெட்டித்துறை;மதவடி.

அங்கமட்டுமில்ல முந்தின காலத்தில எல்லா தகப்பன்மாரையும் அய்யா எண்டுதான் கூப்பிடுற வழக்கம் இருந்தது; இப்பவும் அரிதாக அந்த வழக்கம் இருக்கு. இப்ப 80 வயதுக்காரரும் அப்பாதான். அதுக்கும் மேல போய்; டாடி, டாட் எண்டும் கூப்பிடுகினம். ஆனாலும் பாருங்கோ அய்யா எண்டு கூப்பிடுறதில ஒரு பணிவும்,கனிவும்,மரியாதையும் கூடுதலா இருக்கும். நீங்கள் அப்பா, டாடி எண்டு கூப்பிடுற ஆளா இருந்தா ஒருக்கா உங்கட அப்பாவ, "அய்யா" எண்டு ஒருக்கா கூப்பிட்டுப்பாருங்கோ; இது விளங்கும்.

அதுசரி, எப்பிடி அய்யா இஞ்ச வந்தவர் எண்டுதான யோசிக்கிறியள். சொல்லுறன் கேளுங்கோ.

எங்கட அப்பய்யா ஒரு மண்டாடி. புதுசா கேள்விப்படுற ஆக்கள் யோசிக்காதயுங்கோ; விளக்கம் சொல்லுறன். கரையார் தங்கட தொழிலுக்கெண்டு சொல்லி கனக்க சிறப்பு / பட்டப் பெயர்கள வச்சிருக்கினம்.  அதில ஒண்டுதான் இந்த மண்டாடி பட்டம்.

"மண்டாடி" எண்ட பட்டத்த அவ்வளவு லேசில ஆரும் வாங்க ஏலாது. மண்டாடி எண்ட சொல்லுக்கு
"கடல பற்றி அறிஞ்சவர்" எண்டு பொருள். (அதுக்காக "கப்டன்" எண்டு நினச்சுப் போடாதயுங்கோ) அதாவது கடல் நீரோட்டம், மீன்களின்ர இருப்பு/ வரவு எண்டு சில விசயங்கள நுணுக்கமா அறிஞ்சு சொல்ல வல்லவர். இவர் கரைத்தண்ணியில இறங்கி நிண்டு, கடல் தண்ணிய கையில அள்ளி, கடலம்மாட்ட வேண்டிக்கொண்டு கடலைப் பாப்பர். அவர் பார்த்து,  இந்த நேரம் இறங்கு எண்டு சொன்னால்தான் கட்டுமரமோ, வள்ளமோ, படகோ கடல்ல இறங்கும். இவருக்கு மரியாதையும், கவனிப்பும் கூட.

இந்த விசயத்தில கெட்டிக்காரராம் எங்கட அப்பய்யா. அதனால அவற்ற பேரும் "மண்டாடிச் செல்லத்துரை" எண்டு ஆகிப்போச்சு.
இன்னொரு விசயம் அந்தக்காலத்திலதான் இந்த "யாதும் ஊரே யாவரும் கேளிர்" எண்ட சொல்லுக்கு சரியான அர்த்தத்த சனம் தெரிஞ்சிருந்தது. இப்ப அது இல்ல.
ஏனிதை சொல்லுறனெண்டா, அந்தக்காலத்தில ஊரூராப்போய் தங்கி நிண்டு தொழில் செய்யலாம். ஒரு இடைஞ்சலும் இருக்காது. இப்ப அதெல்லாம் மல ஏறிப்போச்சு. உங்கட அப்பம்மா, அப்பப்பாக்கள கேட்டுப்பாத்தால் தெரியும். எல்லாத்தொழிலுகளும் அப்பிடித்தான். அம்பட்டரோ, வண்ணாரோ, நளவரோ, பறயரோ எல்லாரும் தொழில் செய்ய ஒவ்வொரு ஊராப்போய், அங்கயே சீவியத்த நடத்துவினம். சீவியம் பிழச்சா அடுத்த ஊருக்கு போய்டுவினம். இதெல்லாம் தன்ர அப்பு ஆச்சி, குஞ்சியாக்கள் சொன்ன கதயள் எண்டு இப்பவும் அம்மா சொல்லுவா..

இப்பிடி அப்பய்யா மண்டாடி செல்லத்துரையோட நாகர்கோவிலுக்குள்ள நுழைஞ்சு தொழில் செய்தவர்தான் என்ர அய்யா சுந்தரலிங்கம்..

ஊருக்குள்ள நுழைஞ்சு கொஞ்சக்காலத்திலயே; அய்யான்ர தொழிலயும் நடவடிக்கையையும் பாத்த அம்மையா "குழந்தைவேலு"வும் சொந்தமும் அய்யாவுக்கும் அம்மாவுக்கும் "சோறுகுடுப்பிச்சு" கட்டிவச்சிட்டினமாம். ஆனாலும் அம்மம்மா "வள்ளியமை" க்கு கொஞ்ச விருப்பமில்லையாம்..

என்ன யோசிக்கிறியள் "சோறுகுடுப்பிச்சது" பற்றித்தான?

அதைப்பற்றி நாளைக்கு சொல்லுறன்..
00

05.00am

கருத்துகள்

  1. சிறபாக இருக்கு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
      இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈழத்து நவீன கவிதைமரபின் "புதிய மாஸ்டர்" கவிஞர் கருணாகரன்

மொழியை வசப்படுத்தி அனுபவங்களை படிமப்படுத்தும் எஸ்.சிவசேகரன் கவிதைகள் -

இலக்கியமும் அதிகாரமும் - சிவசேகரன்