இலக்கியமும் அதிகாரமும் - சிவசேகரன்
01-
அண்மையில் கவிஞர் சித்தாந்தன் பகிர்ந்து கொண்ட கருத்தில் இலக்கிய வடிவம் பற்றியும் இலக்கியத்தை (தரத்தை) தீர்மானிக்கும் அதிகார மையங்கள் பற்றிய தன் கருத்துகளை அங்கே சுட்டி காட்டி இருந்தார்.
இலக்கிய வடிவம் இங்கு பிரச்சினை இல்லை. வடிவம் ஒரு பிரதியின் தரத்தை அதற்கான பெறுமானத்தை தராது என்பது ஏற்புடையது. அது அது (கவிதை,சிறுகதை,நாவல்) தனக்கான பல்வேறு வடிவங்களை உருவாக்கி முன் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. சித்தாந்தன் குறிப்பிடும்
இலக்கிய தரத்தை தீர்மானிக்கும் அதிகார மையங்கள் என்ன? என்பதே கேள்வி.
"எதைக் கொண்டாடுவது எதை நிராகரிப்பது என்ற அதிகார மையங்கள் இலக்கியப் பரப்பில் உருவாகத்தொடங்கிவிட்டன. இவை வலிந்து சில இலக்கியப் பிரதிகளை கொண்டாடுவதற்கான யுத்திகளைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றன. இவை குழுநிலை சார்ந்து வலிந்த கருத்தேற்றங்களை செய்துவிடுவதோடு அவற்றை பொதுக் கருத்துநிலையாக மாற்றவும் முயல்கின்றன."
- சித்தாந்தன் -
சித்தாந்தன் கூறுவது போல அதிகார மையம் இன்றோ நேற்றோ தோன்றியது அல்ல. ஆதிமுதல் இலக்கியத்தை; அதன் தரத்தை தீர்மானித்த அதிகார மையங்கள் என்பது நான் குறிப்பிடும் அக்கடமிக்ஸ் என்ற கல்வியியல் சார்ந்தவர்களாகவே இருந்து வருகிறது. பின்னர் அவர்களின் கோட்பாட்டு சாட்டகங்களை காவிக்கொண்டு திரிபவர்களாக இந்த மையம் மாறியிருக்கிறது. ஆனால் தமிழக இலக்கிய பரப்பில் இந்த அதிகார மையங்கள் என்பது யாராக இருக்கிறார்கள் என்பது வெள்ளிடை மலை. ஆனால் ஈழ இலக்கிய பரப்பின் அதிகார மையங்கள் எவை? யார்?
முதலில் ஈழ இலக்கிய பரப்பில் இலக்கிய தரத்தை தீர்மானிக்கும் அதிகார மையங்கள் என்ன என்பதை நோக்கினால்; 70,80 களில் முழு முனைப்போடு இலக்கியம் மீது விமரிசனங்கள் முன்வைக்கப்பட்ட/ தொடங்கிய காலம். அன்று முதலே சித்தாந்தன் குறிப்பிடும் அதிகார மையங்கள் தோன்றி விட்டன. அடுத்து இந்த அதிகார மையங்கள் என்பவையும் அதில் இருப்பவர்களும் யாராக இருக்கிறார்கள் என்பதை நோக்கின் பல்கலைக் கழக மட்டத்தில் இருக்கும் பேராசிரியர்களும் விரிவுரையாளர்களுமே!? (இவர்களில் தமது பட்டங்களுக்காக செய்த ஆய்வுகளை புத்தகங்கள் மாற்றியவர்கள்; அவை தாண்டி ஒரு சிறுகதை, கவிதை, நாவல் எழுதாதவர்கள்). சிலர் விதிவிலக்காக சில சிறுகதைகளை எழுதியுள்ளார்கள். இந்த ஈழ இலக்கிய அதிகார மைய பட்டியலில் வரும் பலரில் கைலாசபதி,சிவத்தம்பி தொடங்கி நுஃமான்,சண்முகதாஸ் தம்பதிகள், சண்முகலிங்கன், சிவலிங்கராஜா, யோகராசா, சிவசேகரம், ஜெயராசா என வளர்ந்து; அவர்களிடம் கற்றவர்களும், இன்றிருக்கும் புதிய விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும் இலக்கிய அதிகார மையங்களாக / பலர் அறிந்த விமர்சன(?) புள்ளிகளாக தொழிற்படுகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்களில் சிலர் வெறுமனே தரவுகளை திரட்டி கொடுக்கும் வேலையை செய்து கொண்டு தம்மை விமர்சகர்களாக நினைத்துக்கொண்டு இருப்பதுதான். 😜
02-
யாழில் அல்லது வடக்கை பொறுத்தவரை பல்கலைக் கழக அதிகார மையங்களின் செல்வாக்கை முழு அளவில் செல்வாக்கு செலுத்துவது யாவரும் அறிந்ததே. வடக்கு மாகாண இலக்கிய பரிசுகள் தொடங்கி மத்திய அரசின் விருதுகள் வரை இந்த அதிகார மைய செயற்பாடுகள் உண்டு. விதிவிலக்காக தெற்கில் சில பொது நபர்கள் இந்த அதிகார மையங்களோடு இணைந்து இருந்தாலும் இறுதி முடிவுகள் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கலாநிதிகளின் கைகளில்தான். தமக்கு சார்பானவர்கள், சாமரம் வீசுபவர்கள், கூழைக்கும்பிடு போடுபவர்கள், அவர்களின் பெயரை எல்லா மேடைகளிலும் ஓதுபவர்கள், தங்களின் மாணவர்கள்..... (இன்னும்) இவ்வாறு நீளும் இந்த அதிகார மையங்களின் இலக்கியத்தை தீர்மானிக்கும் வேலைகள் பல நல்ல படைப்பாளிகளை காணாமல் ஆக்கி இருக்கிறது.
இந்த நிலை இன்னும் தொடர்வதனாலேயே பலர் தாமும் தம் பாடுமாக இருந்து விட்டு போகிறார்கள். இன்னும் சிலர் ஏன் வம்பென்று வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நம்மால் அப்படி இருக்க முடியாது. இந்த அக்கடமிக்ஸ் கைகளில் இருந்து ஈழ இலக்கியம் என்றும் விடுபடப் போவதில்லை. இலக்கிய கூட்டங்களில் வந்து நின்று கொண்டு ஆய்வுக் கட்டுரைகளையும், கோட்பாட்டு குண்டுச் சாட்டிகளுக்கும் குதிரைகளை ஓட்டிக் கொண்டிருக்கும் நிலை எத்தனை தலைமுறை கடந்தாலும் மாறப் போவதில்லை. ஈழ இலக்கியம் வாங்கிக் கொண்ட சாபம் போல இந்த அக்கடமிக்ஸ் அதிகார மையங்கள் முன்னால் நின்று கொண்டு; நல்ல இலக்கியங்களின் வருகையை தடுத்துகொண்டு நிற்கிறார்கள் என்பதே கசக்கும் உண்மை.
சித்தாந்தன் போன்றவர்கள் மேற்கூறிய இந்த அக்கடமிக்ஸ் அதிகார மையங்களோடு தொடர்பில் இருந்து கொண்டு இவ்வாறான கருத்துகளை வெளியிடுவது முரண் நகை.
0
கீழே சித்தாந்தனின் முழுமையான பதிவு
👇
"இலக்கியம் என்பது வெறும் வடிவச்சங்கதியல்ல என்பது முக்கியமானது. ஒரு வடிவம் ஒரு பிரதிக்கு இலக்கிய பெறுமானத்தை வழங்கிவிடாது. ஒரு பிரதியாளனைவிடவும் அதனை வாசிக்கின்ற வாசகர்களே அப்பிரதிக்கு பெறுமானத்தை வழங்கிவிடுகின்றார். வெறும் புறநிலைக் கருத்தேற்றங்கள் அந்தப் பிரதியின் மீது கட்டமைக்கப்படுகின்ற மாயத்தோற்றங்களே. எதைக் கொண்டாடுவது எதை நிராகரிப்பது என்ற அதிகார மையங்கள் இலக்கியப் பரப்பில் உருவாகத்தொடங்கிவிட்டன. இவை வலிந்து சில இலக்கியப் பிரதிகளை கொண்டாடுவதற்கான யுத்திகளைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றன. இவை குழுநிலை சார்ந்து வலிந்த கருத்தேற்றங்களை செய்துவிடுவதோடு அவற்றை பொதுக் கருத்துநிலையாக மாற்றவும் முயல்கின்றன. ஆனால் இவை யதார்த்தமற்ற செயல்நிலைகள். ஒரு படைப்பு அதன் மீது கட்டமைக்கப்படுகின்ற கருத்தேற்றங்களால் மட்டும் நிலைநிறுத்திவிட முடியாது. அதற்கு இயங்குநிலைத் தன்மை இருக்கவேண்டும். வெறும் சொற்களை ஒரு கோவை நிரலொழுங்கில் அடுக்கிவிட்டு அதன் மீது இலக்கிய சாயத்தைப் தடவ முடியாது. ஏனெனில் சாயம் கரைந்துபோகக்கூடியது. வார்த்தைகள் மட்டுமே எஞ்சிக்கிடக்கக்கூடியன. இலக்கியம் சொற்களால் எழுதப்படுவதாக இருந்தாலும் வெறும் சொற்கள் மட்டும் இலக்கியமல்ல. அப்படியென்றால் அதற்கு இலக்கியப் பெறுமானம் எப்படி வந்தடைகின்றது என்ற கேள்வி எஞ்சுகின்றது. இலக்கியம் மட்டுமல்ல கலைகளுக்கும் இது பொருந்தும். கலை என்பது அதன் புறத்தோற்றமல்ல. கலையிலும் இலக்கியத்திலும் மரபார்ந்த எல்லைகள் மீறப்பட்டுவருகின்றன. நிர்ணயமயப்படுத்தப்பட்ட கலை, இலக்கியக் கோட்பாடுகள் மீது எண்ணற்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. நிகழ்த்தப்படுவதால் மட்டும் நிகழ்த்துகலைகள் எல்லாம் அவற்றுக்கான பெறுமானத்தை எய்திவிடுவதில்லை. அதைத்தாண்டிய புரிதல் பார்வையாளனிடம் ஏற்படுத்தும் புரிதலிருந்துதான் அது கலைக்கான பெறுமானத்தை அடைகின்றது."
0




கருத்துகள்
கருத்துரையிடுக