லாக்டவுண் - 04
சாணக்கியப்போலிகள்
##
எங்கள் வீடுகளுக்குவெளியில்
மரணம் காவலிருக்கையில்
கிருமி புகாத
இரகசிய அறையிலிருந்தபடி
கண்ணாம்பூச்சி விளையாட
காலம் பார்க்கும் உங்களை
பருப்புக்கும் சமென்ரின்னுக்கு
மூன்று மணிநேரமாய்
மூன்றடி தள்ளிய வரிசையில்
காத்திருக்கும் ஏழைகளின்
ராஜாக்கள் என்பதில்
பெரும்புழகாங்கிதம் எமக்கு..
ஐந்தாண்டுகளுக்கொருமுறை
கண்ணாம்பூச்சி விளையாட்டில்
நீங்கள் கட்டிவிடும் எங்கள் கண்களை
இன்னமும் அவிழ்க்க விடாத
உங்கள் சாணக்கியத்தை
மெச்சாத நாட்களே இல்லை..
மாண்புடை மந்திரியாரே!
கட்டளையுங்கள்
உங்கள் தேர்தல் நாடகங்கள்
நலமாய் அரங்கேற
நாம் என்ன செய்யட்டும்
நாங்களும் விளக்கேற்றட்டுமா?
அல்லது
யன்னலோரம் நின்று
கைகளை தட்டட்டுமா?
ஓ...வானே! தயைகூர்...
நாமெல்லாம் வெளியில் வருகிறோம்
எங்கள் எல்லோர் மீதும்
ஒரு இடியை இறக்கு
"பருப்புக்கு காத்திருந்தவர் மயங்கிச்சாவு"
"பட்டினியில் பரிதாபச்சாவு"
என்ற செய்தியை காவியபடி
புதிதாய் ஒரு நாடகத்தை
இவர்கள் அரங்கேற்ற முன்
"இடிதாக்கி இறப்பு" என்னும் செய்தியே
புகழ் எமக்கு...
00
எஸ்.சிவசேகரன்
06.04.2020

கருத்துகள்
கருத்துரையிடுக