சிறந்த கவிதை வடிவமைப்பாளனின் கவிதைகள் - கவிஞர் அனாதியன்


        உரையாடல்கள் இல்லாமல்; சந்திப்புகள் இல்லாமல் கவிதைகளுக்கு ஊடாகவே நேசங்களை கொண்டாட முடியும் எனும் உண்மையை எனக்கு சொல்லித் தந்திருக்கிறார் கவிஞர் எஸ். சிவசேகரன்.

இணையங்களில் எல்லோருடைய கவிதைகளையும் படிப்பதற்குரிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை. வேலைகளும் நேரமின்மையும் பலசமயம் ரசனைகளை புசித்துக் கொள்கிறது. அந்த காரணம் தான் இவர் எழுத்துகளை என்னால் படிக்க முடியாமல் போனது என நினைக்கிறேன்.

எஸ்.சிவசேகரன் எனும் பெயரில் கவிதைகளை எழுதும் இவரிடம் ஒரு தீவிர வாசகனை காண்கிறேன் என்பதையும் தாண்டி ஒரு சிறந்த கவிதை வடிவமைப்பாளனைக் காண்கிறேன். இவரின் கவிதைகள் ஒவ்வொன்றும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
கவிதைகளில் அவர் கையாளும் சொல்லாடல் உத்தி தான் இந்த கட்டுரையை எழுதத் தூண்டியிருக்கிறது.

இவரின் பெரும்பாலான கவிதைகளில் சமூக அக்கறை தென்படுகிறது பின்வரும் கவிதை ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வு குரலாய் எஸ் சிவசேகரனிடமிருந்து ஒலிக்கிறது
00



எங்கள் விரல்களிலிருந்து சொட்டும்
இரத்தத்தை குடித்து உடல் வளர்க்கும் இரண்டுகால் அட்டைகளே!
கொழுந்து கொய்யும் கைவிரல்கள்
ஒரு நாள் உங்கள் 
தலையை கொய்யும் ஆயத்தமாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
00

இந்தக் கவிதையில் மலைநாட்டு தொழிலாளர்களின் மனக்குமுறலை கவிஞர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

மனிதன் என்னதான் புகழ் பணம் என சுகமாய் வாழ்ந்தாலும் மரணத்திற்கு முன் யாரும் விதிவிலக்கல்ல எனும் வாழ்க்கை தத்துவத்தை சிவசேகரனின் பின்வரும் வரிகள் மிகச்சிறப்பாக சொல்லுகிறது.

//
கவலையே இல்லாமல்
உலாத்திக் கொண்டிருக்கும்
ஆத்மாவை உலுப்பி
எச்சரிக்கை செய்து அடங்கிப் போகிறது
ஒப்பாரி ஓலங்களுக்கு இடையில் கேட்கும் பறையோசை 
//

ஆடம்பரமாக அலங்காரமாக எவ்வளவு விடயங்களுக்கு நாம் பணத்தை வீண்விரயம் செய்கிறோம் திருவிழா எனும் பெயரில் லஞ்சம் வாங்காத கடவுளுக்கு பணத்தை அள்ளிக் கொடுக்கிறோம். ஆனால் நம் கண்முன்னே இருக்கும் வறியோரை எப்போதும் கண்டுகொள்ள முடிவதில்லை. இத்தகைய நிலையை தன்னுடைய வரிகளில் உரக்கச் சொல்கிறார் சிவசேகரன் ஒரு இளைஞன் குரலாக அவரின் குரல் நகரும் அந்தக்கவிதை இவ்வாறு தொடங்குகிறது

//
பத்தோ பதினைந்தோ
லட்சங்கள் கரைந்திருக்கும்
பட்டாசுக்குக்ப்பாட்டுக்கூத்துக்கும் 

உங்களுக்கு தெரியுமா ?
நாளைய சோற்றுக்காக 
இன்றுபோய் தூண்டில் வீசும்
மகா பணக்காரர்கள் அதிகம் இருப்பது
எங்கள் ஊரில் தான் 
//

இவருடைய கவிதைகள் பலவற்றிலும் இனம் சார் உணர்வுகள் அடைக்கு முறைக்கு எதிரான குரல்கள் சமகால அரசியல் சார் விடயங்களையும் காணமுடிகிறது. இங்கே குறிப்பிடும் இருவரியில் காலகாலமாக ஏமாற்றப்பட்ட இனமொன்றின் நிலையை மிகத் தெளிவாக சொல்லும் சிவசேகரனின் கவித்துவத்தை மனமுவந்து பாராட்டுகிறேன்
//
மண்ணுக்கும் எங்களுக்கும்
எப்போதும் ராசி இல்லை 
//

சமூகத்தை நேசிக்கும் சிவசேகரனின் கவிதைகள் பெருமையையும் காதலையும் எப்படி பாடாமல் இருக்க முடியும். இதோ என்னை காதலிக்க பணித்த கவிஞரின் காதல் வரிகள்

//
 சில கோலம் போடுவது நீதான்
புள்ளிகளை இணைக்கும் போது 
உன்னை விட அதிகமாய்
நெளிவது மறைவதும் நானல்லவா 
//

இனி எனக்கு அதிர்ஷ்டம்தான் 
தெத்திப்பல்லுக்காரி தாரமாய் வருவது 
தேயாத அதிர்ஷ்டம் என்று
பாட்டி சொன்ன ஞாபகம் 
//

இவரின் முகநூல் மற்றும் வலைப்பக்கத்தில் பகிரப்பட்டு உள்ள பல்வேறு விடயங்களை பார்க்கும்போது அவரின் தேடல் ரசனை பரந்துபட்டது என எண்ணத் தோன்றுகிறது.
சக கலைஞனை கொண்டாடும் மனபக்குவம் இயல்பாகவே கைவரப்பெற்ற சிவசேகரன் தொடர்ந்தும் பல கவிதைகளை எழுத வேண்டும்.

- பிரியமுடன் அனாதியன்-

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈழத்து நவீன கவிதைமரபின் "புதிய மாஸ்டர்" கவிஞர் கருணாகரன்

மொழியை வசப்படுத்தி அனுபவங்களை படிமப்படுத்தும் எஸ்.சிவசேகரன் கவிதைகள் -

எஸ்.சிவசேகரன் - கவிதை - அஷிராவின் மடியோடு தொலையும் காலம்