எஸ்.சிவசேகரன் கவிதைகள்



துயிலாரில்லங்களில் வழியும் கண்ணீர்
0

சரித்திரத்தால் சலவை செய்யப்பட்டு
சத்திரியராக்கப்பட்ட சாமானியர்களின்
கனவுகள் கானலாகிப்போன
தேசத்தின் காதுகளில்
மீண்டும் திணிக்கப்படுகிறது
ஒரு சுதந்திர கீதம்...
0

திரும்பும் திசையெங்கிலும்
துகிலுரியப்பட்டு குவிக்கப்பட்டிருக்கும்
எண்ணில்லா உடல்களிலிருந்தும்
வழியும் குருதியை
கழுவிக் கழுவி துடைத்துக்கொண்டிருக்கிறது
ஒரு
பெருநேசத்தின் தீராத கண்ணீர்
0

நிமிர்ந்து ஒளிரும் ஒவ்வொரு சுடர்களிலும்
மிளிர்வாய் தெரிகிறது
எட்டுத்திக்கும் ஓடியலைந்து
உறங்கிக்கிடந்த சத்திரியர்களின்
துயில் குலைந்து
சிவந்த கண்கள்...!
0

யார் கண்ணிலும் பட்டுவிடாதபடி
அயற்சொற்களைப் பிரிந்து
தலைகீழாய் வீழ்ந்து கிடக்கும்
" தாகம் " என்ற ஒற்றைச் சொல்லின் பொருளை அறிந்த
வீழாத சத்திரியர்களின்
நிசப்த விம்மலின் அதிர்வில்
கலங்கிக்கொண்டிருந்தன
ஒவ்வொரு சுடரும்....!
00
2017


பரிசு
0
அடுக்கடுக்காய்
அவனிடம் குவிந்துகிடந்தன
அவளை வசப்படுத்தும் வசீயப்பரிசுகள்

அவள் சொல்லும் அத்தனைக்கும்
தலையாட்டி பொம்மையாய்
அவன்

பணக்காரன் என்பது தொடங்கி
பண்பாளன் என்பது வரை
அவனுக்கு பல முகங்கள்
அவளின் கண்களுக்கு

அவற்றை ஒப்புவிக்க
அவன் தலையும்
அவன் அம்மாவின் தலையுமே
துணை அவனுக்கு

அவள் சிலபோது கோபித்து
சிணுங்கி அழும்போதெல்லாம்
அவளை மகிழ்விக்க
அவனிடம் குவிந்து கிடந்தன
பொய்கள் என்னும்
அதிவசீய பரிசுகள்
00
2018

இருட்டின் கண்கள் -
0

சாட்சிகள் இல்லாமல் தள்ளுபடி செய்யப்படும்
பலகோடிக் குற்றங்களுக்கு
ஒரே சாட்சி
காற்றின் மெட்டுக்கு முணுமுணுத்தபடியே
ஊர்சுற்றும் இருட்டு..

யாரும் பாராமல் தினமும் நிகழும்
போர்களின் கற்பழிப்புகளையும்
சிறைகளின் சுவர்களில் எதிரொலிக்கும்
சித்திரவதைகளையும்
ஏழைவீடுகளின் தூக்கிடல்களையும்
மாடிவீட்டு மர்மச்சாவுகளையும்
பார்த்துப்பார்த்து அலுத்துப்போகும்
இருட்டின் கண்கள் ஓய்வெடுப்பதற்காய்
விழித்தபடியே தவமிருந்து
காலதேவனிடம் வாங்கிய வரமே
இந்தப் பகல்கள் என்றும்

பொல்லாத சங்கதிகளை
காதுகளால் கேட்டவரே
காணாமல் போய்விடும் நல்யுகத்தில்
பல்யுகங்களாக நடக்கும் சங்கதிகளை
கண்ணால் கண்டாலும்
உயிரோடுதான் உலாத்துகிறது
அதிசய இருள்

அதோ
தன்னைக் காட்டிக்கொடுத்துவிட்டதாய்
என்னைக்கொல்லும்
குரூரத்துடன் சிவந்துகொண்டிருக்கின்றன
இருட்டின் கண்கள்

2018-

❤️ ❤️ ❤️ ❤️ ❤️

நீ மறக்க வேண்டிய துயரம்
0

எப்போதோ நடந்துமுடிந்த
நம் சந்திப்புகளை
இப்போது நீ நினைவூட்டியதில்
எனக்கு கொள்ளை ஆனந்தம்
0
பிரிதலுக்காக நீ முன்வைத்த
உன் தரப்பு வாதங்களுக்கு
என் தரப்பிலிருப்பது
கள்ள மெளனம் மட்டுமே என்பதை
முற்றாக அறிந்தும்
மீண்டும் மீண்டும் என் நலமவாவும்
உனது நேசத்தை
என்னவென்று சொல்வது..?

0
நான் உன்னை தொட அருகதையற்று
தொடரும் நிழல் என்று சொன்னதில் கூட
சங்கோஜம் இல்லை எனக்கு
0

நீ மறக்க வேண்டிய துயரம்
நானாக இருப்பதில்
எனக்கிருக்கும் சின்ன நெருடலோடு
உனக்கு நரைவிழுந்து விட்டதாய்
நான் எண்ணிக்கொண்டிருக்கையில்
என் காதிடுக்கில் ஒழிந்திருந்த
இளஞ்சிவப்பு முடியொன்றை
அஷிரா
கண்டுபிடித்து சொன்னபோதுதான்
குறித்துக்கொண்டேன்
நம் காதலின் வயதை..
000

2019

புத்தனாகுதல் இலகு -
00

சித்தார்த்தன் தன்னையே எரித்து
வாயால் துப்பிய எச்சில்களையே
நீ கிளறிக்கொண்டிருக்கிறாய்
ஞானம்பெற நெடுங்காலமாய்..

ஆசைதுறந்தால் புத்தனாகலாம் என்பது
எவ்வளவு பெரும்
அறிவிலி அபத்தம் நண்ப..!

ஞானம் பெறுதல்கூட ஆசைதானே

ஒன்று சொல்கிறேன் கேள்

அங்கங்கள் ஒவ்வொன்றையும்
இடுங்கி எடுத்து
தோசைக்கல்லில் சுட்டுச்சுவைத்த
உத்தம தேசம் வாழ் உனக்கு
இறந்த குழந்தையை கண்டா
ஞானம் வந்துவிடப்போகிறது...

பொசுக்கி அழித்துப் புன்னகைத்த
புதுயுகத்தில்
அழுகிக்கொண்டிருக்கும் உடல்கள் கண்டா
உனக்கு ஞானம் வந்துவிடப்போகிறது

பிச்சைகாரனைப் பார்த்ததும்
ஞானம் பெறுதல்
சாத்தியமென்றால்
தேசங்களெல்லாம் புத்தர்கள்
நிரம்பியிருப்பார்கள்

போதிகளைத்தேடி ஏன் நீ
பயணங்கள் போகிறாய்

நீ அறிவாயா?
புத்தனாதல் மிக மிக இலகு

என்னோடு வா
என் வீடு அருகில்தான்

என் ஊரை விழுங்கிய
போதிக்காட்டையே
உனக்கு பரிசளிக்கிறேன்
அமர்ந்து கொள்
0

2019


புன்னகையின் வாசம்
*********************

இந்த
பாவப்பிறவி முடியுமுன்
ஒரு கொடுங்கோபத்தை
ஒரு கூரிய வாளின் வீச்சினை
ஒரு வார்த்தை தெளிக்கும் விசத்தை
ஒரு வன்மம் தீர்க்கும் உதையை
மண்டியிடச் செய்யும்
புன்னகையை கற்று விட
எண்ணிக்கொண்ட போதுதான்
வேங்கைகளின் காட்டில்
கூடுகட்டிய வெண்புறாவின் கதையை
அஷிராவுக்கு
சொல்லிக்கொண்டிருக்கிறாள் அம்மா..
0

உதிர்ந்து கிடந்த
வெண்புறாவின் இறகுகளில்
தெரிந்த விம்பங்களை
பரவிப்படரும் குருதி
மெல்ல மெல்ல விழுங்கியதை
அம்மா சொல்லி முடிக்கையில்
ஒட்டச்சாத்தப்படாத
யன்னல் கதவிடுக்கில் புகுந்து
என் அறைக்குள் நுழையும் காற்றோடு
கலந்து வருகிறது
இறகுகளோடு உதிர்ந்து விழுந்த
அந்தப்புறாவின்
கடைசிப் புன்னகையின் வாசம்..
0

2018

பரகசியமாய் போன நேசம்
*

நேற்றைய கனவின் இடையில்
உன் நலத்தை அவாவிய
எனது நேசம்மீந்த விசாரிப்பை
காற்றின்
காதிலல்லவா சொல்லியிருக்கிறாய்..!

அதோ பார்
காடு மலையெல்லாம் கடந்து பரவிக்கொண்டிருக்கிறது
பரகசியமாய் போன எனது நேசம்..

என்ன செய்வாய் இனி..?

ஒன்றில்
என்னை நீ
மீண்டும் சிறையிட்டு விடு;

அன்றில்
என் கவிதையை தீதென்று
காற்றிடமே முறையிட்டு விடு..!

28.10.2019
09.40pm


நீ - நான் - மழை

ஊழிப் பெருங்காற்று
உடம்பெல்லாம் கூதல்
உன்னருகில் நான்
ஒரு ஜென்ம பலன் எனக்கு...!

ஆட்டி வைக்கும் இடிமுழக்கம்
அறுக்கின்ற ஒளி மின்னல்
இறுக்கி அணைக்க நீ
ஏழு ஜென்மம் போதாது எனக்கி..!

கால் ஒடுக்க உன் கால்கள்
கை மறைக்க உன் கைகள்
முகம் புதைக்க உன் மார்பு
முற்பாவ மோட்சமெல்லாம் வரும் எனக்கு...!

விறைக்கின்ற என் விரல்கள்
புதைக்க வாகாய் உன் கக்கம்
சூடேற்ற உன்வாய் முத்தம்
சொர்க்கமடி நீ எனக்கு

சோர்ந்து போன வானம்
சூடான் தேநீரோடு நீ
உன் அருகில் நான்
தேவையென்ன சொல் எனக்கு


குளிரோடு சேர்த்து
உன்
முத்தத்தின் வாசனையையும்
கொண்டுவந்து விடுகிறது
இந்த மழை

முகட்டு இடுக்கால் ஒழுகும் மழை
உடல் சிலிர்த்து நெளியும் நீ
உன்னை போத்தும் போர்வையாய் நான்
போதாது போதாதென்று புலம்புகிறது காதல்

கொழுந்துவிட்டெரியும் நேசப் பெருந்தீயில்
அவிந்துகொண்டிருக்கிறது
உன் நினைவு உரமுண்டு
காதல் நீருறிஞ்சி
செழித்த
உடலெனும் சதை வயல்..!
00

அதனாலென்ன....??
00

ஆமாம் நண்ப...!
உனக்கு
கைகள் இல்லை

அதனாலென்ன

உனக்காய் பரிதாபப்படுவோரிடம்
கையறு நிலையும் வாழ்வென்று
திமிரோடு அறிவி..
0

ஆமாம்
உனக்கு கண்களும் இல்லை

அதனாலென்ன..?

நான் உங்கள்
வக்கிர அவஸ்தைகளை
பார்ப்பதிலிருந்து தப்பித்துவிட்டதாய்
புன்முறவலோடு சொல்..
0

ஆமாம்
உனக்கு கைகளும் இல்லை;

அதனாலென்ன..?

வஞ்சகர்களிடம் கையேந்திவாழும்
அவலநிலையிலிருந்து
நீ பாக்கியம் பெற்றுவிட்டாய்
0

ஆமாம்
நீ மெலிந்து போய்விட்டாய்

அதனாலென்ன..?

அதிகாலை ஓட்டமுனக்கில்லை
அழுத்தமும் அச்சமும் உனக்கில்லை
மருந்தோடு வாழும்
பரிதாபம் உனக்கில்லை
00

ஆமாம்
உனக்கு மரணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது
இன்றொ நாளையோ
நீ மரணிக்கபோகிறாய்

அதனாலென்ன..?

நீ
என்னைவிட அதிஷ்ட சாலி

இரக்கமற்ற மனிதர்கள் வாழும்
பூமியிலிருந்து
விடுதலை பெறப்போகிறாயே..!
0

நண்ப..!
ஒன்றை மறவாதே

மகிழ்ச்சி என்பது
வெளியில் எங்கும் இல்லை
அது
உன்னுள் இருக்கிறது

எஸ்.சிவசேகரன்

#மீள் 2018


அரவமில்லாமல்
அபத்தமொன்று
நடந்தேறியிருந்தது நேற்றிரவு

முலைப்பால் குடித்த
குணம் மறந்த பேயொன்று
மலைக்காமல் செய்ததந்த அபத்தத்தை

தாயவள்
குரல்வளை அறுத்து
மார்புகள் கிழித்து
அவள் உயிர்குடித்துப்போக
எப்படி முடிந்தது அவனால்
0000

000

பத்து நிமிடங்கள்

வெறும் பத்து நிமிடங்களில்
இந்த பூமியில்
என்ன செய்துவிட முடியும்
உங்களால்...?

ஏதாவதொரு ரீவியில்
ஏதாவதொரு சீரியலின்
ஒரு பகுதியைப் பார்க்கலாம்

அல்லது
கட்டாயத்தின் பேரால்
ஒரு குட்டித்தியானம் செய்யலாம்

இல்லாவிட்டால்
கொழுப்பை குறைக்க ஒரு
மெதுநடை போய்வரலாம்

அல்லது
சலவை இயந்திரத்துக்குள் போட்ட
ஒரு சேர்ட்டை கசக்கி
இரண்டுமுறை கழுவியெடுத்து
கொம்பர்டில் தோய்த்து
காயப்போட்டு விடலாம்

ஆ.. ஒன்றை மறந்துவிட்டேன்
வெறும் பத்து நிமிடங்களில்

ஒரு நிறை பெண்ணையோ
அல்லது
ஒரு சிறுமியையோ
இந்த பூமியில்
பலாத்காரம் செய்துவிடலாம்

000

. சூர! நின் தலைகள் எங்கே?
00

ஓ....சூரியனே..!
நீயாவது சொல்
மருதாணிபூசிய வானவளோடு
நீ சல்லாபிக்கப் போகுமுன்
வேல்கம்பு வீழ்த்திய
சூரனின் தலை எங்கே..?

ஓ..காற்றே..!
நீயாவது சொல்
மதுவுண்ட மந்தியின் மதர்ப்பில்
நீ அண்டமெல்லாம் சுற்றிக்கொண்டிருக்கையில்
வேல்கம்பு வீழ்திய
சூரனின் தலை எங்கே..?

ஓ...மேகங்களே..!
நீங்களாவது சொல்லுங்கள்
ஊடல்கொண்டுலாவிய போது
வேலகம்பு வீழ்த்திய
சூரனின் தலை எங்கே..?

குறவர் மருகனை
கொண்டாட வைத்த சூரா..!
மீண்டும் வந்தெம்மை வருத்து
அப்போதாவது காக்க வரட்டும்
ஒரு புதுக்கடவுள்
கையில் துப்பாக்கியோடு..

00000

ஆவிகள் அலையும் தெருக்கள் -


ஆரவாரிக்கும்
அரசியல்வாதிகளைப்போல் அல்லாமல்
அமைதியாய் இருந்தபடி
நாட்டைக் கூறுபோட்டிருக்கும்
குறுநெடுந்தெருக்களெங்கும்
பகலிரவாய் அலைகின்றன
இருளில் மட்டுமே உலாவுமென்று
யாரோ சொல்லிவைத்த ஆவிகள்
0

கைகள்விட்டு சாகசம் செய்தவர்கள்
காதலின் கனவில் பறந்தவர்கள்
முச்சந்திகளில் முறுக்கியவர்கள்
முன்னால் சென்றவரில் மோதியவர்கள்

ஹெயார் ஸ்டைல் குழம்பிவிடுமென்று
ஹெல்மெட் போடாத சோடிகள்
ஓவர் ஸ்பீட்டில் செல்பி எடுத்தவர்கள்
ஒன்லைனில் கேம் விளையாடியவர்கள்

அதிகாலையில் டிப்பர் மோதியவர்கள்
அதிபோதையில் டிப்பரில் மோதியவர்கள்
எதிர்பாராமல் இடையில் புகுந்தவர்கள்
எதிர்காலமில்லாமல் தெருவில் கிடந்தவர்கள்
0

எல்லோரும் 
கோரமாகவும் கோபமாகவும்
அலைகிறார்கள் தெருக்களெங்கும்
0

அதோ
பூமியின் மரணக்கணக்கு வழக்கில்
எமனுக்கும் சித்திரகுப்தனுக்கும்
உருவான பிணக்கில்
கணக்காளர் பதவியை
இராஜினாமாச் செய்ய
சித்திரகுப்தன் முடிவெடுத்திருப்பதாய்
சொல்லிக்கொண்டே
அடுத்த தெருவில் ஏறிக்கொண்டிருக்கிறது
கால்கள் துண்டிக்கப்பட்டு
அவசர சிகிச்சைப் பிரிவில்
உயிரை விட்டவனின் ஆவி..!

00

சு.வில்வரத்தினம் நினைவாக

. சுவி என்றோர்
கவி இருக்கிறான்
புவி மீதினில்

இலை யென்று
அலைந்தார்க்கு
விலை சொல்ல

சுவி என்றோர்
கவி இருக்கிறான்
புவி மீதினில்

ஓடியலைந்து
வாடிடுவாரை
நாடிப்பாட

சுவி என்றொர்
கவி இருக்கிறான்
புவி மீதினில்

மண் வாசம்
விண் கேட்க
பண் பாடும்

சுவி என்றோர்
கவி இருக்கிறான்
புவி மீதினில்

போர் தன்னை
நேர் பாடி
பேர் கொண்ட

சுவி என்றோர்
கவி இருக்கிறான்
புவி மீதினில்

0000

எஸ்.சிவசேகரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈழத்து நவீன கவிதைமரபின் "புதிய மாஸ்டர்" கவிஞர் கருணாகரன்

மொழியை வசப்படுத்தி அனுபவங்களை படிமப்படுத்தும் எஸ்.சிவசேகரன் கவிதைகள் -

எஸ்.சிவசேகரன் - கவிதை - அஷிராவின் மடியோடு தொலையும் காலம்