எஸ்.சிவசேகரன் கவிதைகள் 04
அஷிராவின் மடியோடு தொலையும் காலம்
******************************************
காலம் - 01
#
என்
நிஷப்தங்களை
அநிஷ்ப்தமாக்கும்
உன்
மாயக்கவிதைகளின்
சொற்களை
எங்கிருந்து பொறுக்குகிறாய்
நீ...
உன்
கண்ணீரை..
உன்
நினைவுக்கிடங்கில்
நிஷப்தமாய் உறங்கும்
இன்னும்
நிணம் கசியா
நினைவுகளை..
நித்திரை
தொலைத்த இரவுகளை..
உன்னை தொடரும்
ஜென்ம பந்த காதலை
எப்படி...?
எப்படி...?
உன்னால் மட்டும்
முடிகிறது அஷிரா..
மாயம்..
மாயம்..
மாயக்கவிதைகளின்
மாயா
நீ..
உன்
மாயத்தில் தொலைந்து
அலைந்துகொண்டிருக்கிறேன்
மீண்டும் இன்னோர்
மந்திர இசையை
எனக்குள்
இலாவகமாய்
புகுத்திக்கொண்டிருக்கிறது
உன்
கவிதை..
நீ..
கவிதைகளின்
பேரரசி..!
00000
காலம் - 02
********
அழகின் இரகசியம்
#
நான்
முத்தங்கள் பற்றிப் பேச்செடுத்தால்
மீசை குத்துமென்னும்
குழந்தையின் பாவனையில்
நீயும்
முகத்தை திருப்பிக் கொள்கிறாய்..!
உன் அழகின் இரகசியம்
என்னவென்று கேட்டால்
இடிந்து போன என் சொக்கை
நுள்ளி எடுக்கிறாய்..!
அஷிரா..!
உனக்கொன்று தெரியாதா?
காதலும் காமமும்
ஆத்திகமும் நாத்திகமும் போன்றது..
உன்னில் என்னையும்
என்னில் உன்னையும்
தேடிப் புதைத்து
தேய்த்து அழிப்பது ஆத்திகம்..
உன்னில் நானா
என்னில் நீயா
என்பதை மறந்து
நானா நீயா என்று கலந்து
நாமாய் வெல்வது நாத்திகம்..
இப்போது சொல்
உன் அழகின் இரகசியத்தை..
அதற்குப் பரிசாய்
குத்தாத முத்தமொன்று
தருகிறேன் நான்..
00000
காலம் -03
***
உதிர்தல் என்பது
இறப்பு இல்லை அஷிரா..!
அது
மகோன்னதத்தின் அறிவிப்பு..
உதிர்தல் என்பது
ஜீவிதத்தின் தளிர்ப்பு..
உதிர்தல் என்பது
புத்தெழுச்சியின் அறிகுறி..
இலைகள் உதிர்வு
மரத்தின் மரணமா?
இல்லை;
அது
மரத்தின் புது ஜனனம்..
பூக்களின் உதிர்வு...
அது
மரத்திலிருந்து
பூக்கள் பெறும் விடுதலை..
அலைகளின் உதிர்வு
கடலின் மரணமா?
இல்லை;
அது
கடலின் கரையை தொடும்
ஆர்வத்தின் ஆர்முடுகல்..
காதலின் உதிர்வு..
அது
இருப்பியல் தத்துவத்தின்
சமன்பாடு தரும் பரிசு..
மனிதனின் உதிர்வு
மானுடத்தின் மரணமா?
இல்லை;
அது
மானுடத்தின்
மறுபரிணாமத்துக்கான
காலத்தின் பரிசீலனை..
இப்போது சொல்
உதிர்தல் என்பது...??
00
காலம் -04
##
உனக்கு
சுதந்திரம் வேண்டுமென்று
புலம்பிக்கொண்டிருக்கிறாய்..
நீ
காற்றைப்போலவே
சுதந்திரம் கேட்கிறாய்..
காற்றுக்கேது
சுதந்திரம்??
காற்றை
கட்டிவிட்டாதாய்
குதூகலிக்கும் குழந்தைகளை
நீ
ஒரு போதும்
ரசித்ததில்லையா..?
காற்றுக்கு தடைபோடும்
வேலிகளை
நீ
ஒரு போதும்
பார்த்ததில்லையா..?
மழையைப்போலவும்
சுதந்திரம் கேட்கிறாய்..
இது
மழலை குமுறலின்
உச்சஸ்தாயி அஷிரா..
மழையை உனக்கு
சுதந்திரம் என்று
கற்பிதம் சொன்னது யார்..?
நன்றாகப்பார்
சுதந்திரமாகவா
பெய்கிறது மழை..??
அநாதைக் குழந்தையின்
ஆர்ப்பரிக்கும் அழுகைபோல
அந்த
மழை விழும்போது
உனக்கு
அதன் சுதந்திரம்
விளங்கவில்லையா..?
பறவை போலவும்
உனக்கு
சுதந்திரம் வேண்டுமென்கிறாய்..
எந்தப்பறவை சொன்னது உனக்கு;
பறப்பதுதான்
சுதந்திரம் என்று?
சுதந்திரம் என்பது
பறத்தல் இல்லை
அஷிரா..
000000
எஸ்.சிவசேகரன்





கருத்துகள்
கருத்துரையிடுக