எஸ்.சிவசேகரன் கவிதைகள் 03
01- ஜிப்ரானின் காதலி
******************
நேற்று நான்
ஜிப்ரானோடு இருந்தேன்..
தன் காதலியைப்பற்றி
எனக்குசொல்லிக்கொண்டிருந்தார் ஜிப்ரான்...
அவளின் அழகு...
அறிவு...
அன்பு...
இம்சை...
இச்சை....
எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார்
கூச்சமில்லாமல்...
எல்லாம் சுகித்துக்கொண்டிருந்தேன்
நான் கூச்சத்துடன்...
நீளக்கதையளப்பில்
ஜிப்ரான் தன்னையே மறந்து
காதலியின் நினைவில்மிதந்துகொண்டிருந்தார்...
எல்லாம் காதல் செய்யும்...
எல்லாம் காதல் சொல்லும்...
எல்லாம் காதல் ...காதல்...காதல்
ஜிப்ரான் இப்போது ஜிப்ரான் இல்லை...
இடையில் சட்டென்று நிறுத்தி
உன்காதலியைப்பற்றி சொல்லென்றார்...
ஓரக்கண்ணால் ஜிப்ரானை நோக்கி
ஒல்லிப்புன்னகை செய்தேன்
மீண்டும்.... சொல்லென்றார்
உன் நினைவுச்செல்களரித்து
நிலைகுலைந்து போன
என்னகச்செல்களின் கணக்கை
ஜிப்ரானுக்கு சொல்லத்தொடங்கினேன்
கூச்சமேயில்லாமல்.....
00
02- ஊரடங்(க்)கிய நாளொன்றின் கனவு-
*******************************
இடைவிடாமல்
இழுத்து இழுத்துக் குரைத்து
சுருதி சேர்த்துக்கொண்டிருக்கும்
சித்தப்பிரம்மை பிடித்த
எதிர்வீட்டு நாய்
முனகக்ககூட இன்று
முப்பது நிமிடங்கள் எடுத்தது..
பாவம்...
சிலகாலமாய் படுத்துறங்கிய
அவசரகாலச் சட்டத்தை
அரைகுறை தூக்கத்தில் எழுப்பி
தெருவில் விட்டிருந்தார்கள்..
பாட்டி சொன்ன கதையில் வந்த
வில்லன்களைப் போல
முகத்தில் சாயம் பூசியபடியே
தெருவெல்லாம்
ஊர்வலம் போயின பேய்கள்..
முப்பது ஆண்டுகளாய்
ஓயாமல் உலாத்திய
பயங்கரவாதச் சட்டம்
ஓய்வெடுக்க ஒதுங்கியபோது
இழுத்து வந்து
குச்சொழுங்கைகளின்
குறுக்கே விட்டிருந்தார்கள்..
நீண்ட காலமாய்
கிடங்கில் கிடந்த துப்பாக்கிகள்
நெஞ்சுக்கும் முதுகுக்கும்
குறிவைத்துக் காத்துக் கொண்டிருந்தன..
தாத்தா அன்றொருநாள்
சொன்னதைப்போல
மூன்று சட்ட(க)ங்களுக்கும் நடுவில்
கவசவாகனங்களிலும்
கரும்பச்சைத் தோள்களிலும்
ஏறிவந்து இறங்கிய
பூதங்கள் பல
எங்கள் கடைகளையும்
கோவில்களையும்
சில மனிதர்களையும்
எரித்துப் போனபின்னும்
அடங்கித்தான் கிடந்தது எங்களூர்...
00
03- முடியாத பழந்தொடர்கதை -
***************************
நாம் அந்நியர்களாக்கப்படுவது
முதல்முறையல்ல தோழனே!
எப்போது அவர்கள்
பேசத்தொடங்கினார்களோ
அப்போதிலிருந்து...
எப்போது அவர்கள்
குடிக்கத்தொடங்கினார்களோ
அப்போதிலிருந்து..
எப்போது அவர்கள்
புகைக்கத்தொடங்கினார்களோ
அப்போதிலிருந்து...
நாம் அந்நியர்களானோம்
எத்தனை தடவைகள்
உன் வீட்டில் அவர்கள்
கல்லெறிந்தார்கள் என்று
நினைத்துப்பார்
எத்தனை தடவைகள்
உன் கதவுகளை அவர்கள்
கொத்தினார்கள் என்று
நினைத்துப்பார்
எத்தனை தடவைகள்
உன்னை அவர்கள்
வசைபாடினார்கள் என்று
நினைத்துப்பார்
அத்தனை தடவையும்
நாம் அந்நியராக்கப்பட்டிருக்கிறோம்
நாம் அந்நியர்களாக்கப்படுவது
முதல் முறையல்ல தோழனே!
மூளைச்சலவையால்
தாகத்துடனே எரிந்தழிந்த
இந்த தேசத்தில்
இரத்ததுக்கு இரண்டு பெயர் தோழனே!
ஒன்று கண்ணீர்
அது எங்களுக்கு பிடித்த பெயர்
இரண்டு வெற்றி
அது அவர்களுக்கு பிடித்த பெயர்
நானொரு பழந்தொடர்கதை
சொல்கிறேன் கேள் தோழா!
நமது பேரன்கள் அந்நியர்
நமது அப்பன்கள் அந்நியர்
நாமும் அந்நியர்
நமது குழந்தைகளும் அந்நியர்
அவர்களின் குழந்தைகளும் அந்நியர்
அந்நியர்
அந்நியர்
அந்நியர்
அந்நியர்...
நாம் அந்நியர்களாக்கப்படுவது
முதல் முறையல்ல தோழனே!
ஒன்றை நினைத்து பெருமை கொள்
நாம் அந்நியரென்று சொல்லிக்கொடுக்க
உனக்கு நான் இருக்கிறேன்
அவர்களும் அந்நியர்கள் என்று
சொல்லிக்கொடுக்க
அவர்களில் மேய்பர்கள்
இல்லை தோழா..!
00
எஸ்.சிவசேகரன்

கருத்துகள்
கருத்துரையிடுக