என்ர கத - 14


என்ர கத - 14
#
எஸ்.சிவசேகரன்
****************

#மலை_கண்டேன்

(நான் நேற்று சொன்ன கதயில வந்த சண்ட என்ன சண்டையெண்டு கண்டு பிடிச்சிருப்பியளெண்டு நினைக்கிறன். அதுதான் நேற்று இயக்கம் வெண்ட ஆனையிறவுச்சண்ட. பெரிய கொண்டாட்டமா இருந்த வெற்றி அது எண்டு பின்னாளில அய்யா சொன்னவர்.)

சரி, அந்த சண்டயில இயக்கம் ஆனையிறவ பிடிக்க, ஆமிக்காரன் கிழக்குப்பக்கத்தில இருந்திட்டான். நாகர்கோவில்லயும், அம்பன்-தரவயிலயும் ஆமிக்காரன் ஆட்சி. பிறகென்ன "எப்பம்மா வீட்ட போறது" எண்டு அடிக்கடி கேட்டுக்கொண்டே இருந்த எனக்கு "இனி போகேலாதய்யா; ஆமிக்காரன் ஊரப்பிடிச்சிட்டான்" எண்டு அம்மா சொல்லிக்கொண்டே இருப்பா எண்டு அக்காக்கள் இப்பவும் சொல்லுவினம்.

இப்பிடியான காலத்திலதான், அம்பன்- தரவை ஆக்களும் இடம்பெயர நாங்களும் அங்கயிருந்து வெளிக்கிட்டம். "நடராஜா சேர்விஸ்" தான். ஆனால் நான் அய்யான்ர சைக்கிள்ள முன்னுக்கு.

வயலுகள கடந்து, ஒரு சந்தியால திரும்பி நடந்தம். அப்பத்தான் நான் முதல்முதலா "மலை" களை கண்டன். அது மண் மலை. தூரத்த இருந்து பாக்க மஞ்சல் நிறத்தில தெரிஞ்சுது. நாகர்கோவிலிலயும் மண் புட்டியள் இருந்தாலும் இப்படி நான் காணயில்ல. அப்பிடிய உயரமான மண்புட்டி அது. இப்ப அதெல்லாம் இல்லாமப்போச்சுது. எந்த ஊரெண்டு கண்டுபிடிச்சிங்களா?

அதுதான் என்னை வளத்த & வளக்கிற மலைமண் ஊர் #குடத்தனை. எட்டு வயசில எப்பிடி தெரியுமெண்டுதான யோசிக்கிறியள். என் "பெருங்கதை சொல்லி" அம்மாதான் இந்த ஊர் பெயரெல்லாம் நான் வளர சொன்னவா.

மலைகளை ரசித்துக்கொண்டு வாற வழியில இன்னொரு மரத்த முதல்முதல் பாத்தன். அதுதான் #சவுக்க_மரம் எண்டு அய்யா காட்டினார். இடப்பெயர்வு எண்டது எனக்கென்னவோ #சுற்றுலா போறமாதிரியே இருந்தது.

சவுக்கமரங்கள கடந்து வந்து, ஊருக்குள் நுழைந்தோம். வந்தாரை வரவேற்க குடத்தனையார் இருத்திவைத்த #கண்ணகி_அம்மன்  எங்களயும் வரவேற்று உள்ளவிட்டாள். அப்பிடியே ஒவ்வொரு வீடுகளாக தஞ்சமடந்தோம். பின்னாளில் (2019) கண்ணகித்தாய் ஊரில் குடியேறிய வரலாற்றையும், தாய் மீது நான் பாடிய "திருப்பொன்னூஞ்சலையும்" சேர்த்து #குடத்தனையூர்_மாதரசி என்னும் நூலாக வெளியிட்டேன்.

ஆனாலும், இங்கும் எங்களால் நிரந்தரமாக இருக்க முடியவில்லை.(எவ்வளவு காலமென்று நின்னைவில்லை), இன்னொரு ஊருக்கு இடம்பெயர்ந்தோம்..

அந்த ஊரைப்பற்றி நாளைக்கு சொல்லுறன்

00

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈழத்து நவீன கவிதைமரபின் "புதிய மாஸ்டர்" கவிஞர் கருணாகரன்

மொழியை வசப்படுத்தி அனுபவங்களை படிமப்படுத்தும் எஸ்.சிவசேகரன் கவிதைகள் -

எஸ்.சிவசேகரன் - கவிதை - அஷிராவின் மடியோடு தொலையும் காலம்