எஸ்.சிவசேகரன் கவிதைகள் 02



01-
உனக்கும் எனக்குமான விரிசலை கணக்குப்போட்டுப்பார்க்கிறேன்

இடையிடை எட்டிப்பார்க்கும்
காமம்கலந்த காதலில்
வெட்கி தோற்றுப்போன நான்
உனக்கும் எனக்குமான விரிசலை கணக்குப்போட்டுப்பார்க்கிறேன்..

களவுகளுக்கு மட்டும் பிரியப்பட்டு துண்டாகிப்போன காதலை கணக்குப்போட்டுப்பார்ப்பதில்
என்ன இலாபமென்று
மீண்டும் வெட்கி தலைகுனிகிறேன்

தூரத்தே கேட்கும்
மாயக்குரலின் இசையென்னுள்
இரகசிய மந்திரமொன்றை
இலாவகமாய் புகுத்திக்கொண்டிருக்கிறது..!
000


02-
அய்யாவின் சவரக் கண்ணாடி
****************

அய்யா தாடி மழித்த
அதே  சவரக்கண்ணாடியில்
நானும் இன்று
தாடியை மழித்துக் கொட்டினேன்..

எத்தனை நாள்
அய்யா
தாடி மழிக்கும் அழகை
அருகிருந்து பார்த்து
ரசித்திருக்கிறேன்..

அவர்
தாடி மழிக்கும் போது
காட்டும் முகபாவங்களை
நானும் அக்காவும்
எத்தனை நாள்
"போலச் செய்தல்"
ஆற்றுகை செய்திருப்போம்..!

பென்சில் சீவ
பிளேட்டை களவாடியதற்காயும்
கத்தரிக்கோல்
காணாமல் போனதற்காயும்
நானும் அக்காவும்
அம்மாவோடு சேர்ந்து
எத்தனை நாள்
கொடும் வசைகள் வாங்கினோம்

இருந்தும் அய்யாவின்
சவரப் பெட்டிக்குள்ளிருந்து
கத்தரிக்கோலும் பிளேட்டும்
காணாமல்தான் போய்க்கொண்டிருந்தன

அஷிரா எட்டிப்பார்த்து
சொன்னதைக் கேட்டு
வெட்கிச்சிரித்து
கண்ணாடியைப் பார்க்கையில்
கண்ணாடியில் பதிந்திருந்தது
அய்யாவின் முகம்..!

அருகிருந்து
ரசித்துக்கொண்டிருக்கிறாள்
கடைக்குட்டி..
00000

எஸ்.சிவசேகரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈழத்து நவீன கவிதைமரபின் "புதிய மாஸ்டர்" கவிஞர் கருணாகரன்

மொழியை வசப்படுத்தி அனுபவங்களை படிமப்படுத்தும் எஸ்.சிவசேகரன் கவிதைகள் -

எஸ்.சிவசேகரன் - கவிதை - அஷிராவின் மடியோடு தொலையும் காலம்