படிமச்சித்திரங்களை வரையும் எஸ்.சிவசேகரன் கவிதைகள் - கவிஞர் பாலமுனை பாறூக்
படிமச்சித்திரங்களை வரையும் எஸ்.சிவசேகரன் கவிதைகள் - கவிஞர் பாலமுனை பாறூக்
00
மீன் தொட்டவன் எல்லாம் அபச்சாரியாம்
கோவில் குருக்கள் சொன்னார்
கருவறைக்குள் இருந்து சிரித்தது
மீன்களோடு உண்டு வாழ்ந்த
வெண்சங்கு
(தலைப்பில்லாத கவிதைகள் 2)
0
காலைப்பனி
பூமித்தாயை முத்தமிட
மூச்சு வாங்க ஓடி வந்து
இலை ஊஞ்சல் ஆடி
இளைப்பாறிக் கொண்டிருக்கும்
முத்து குழந்தை
0
நிலாச்சாரல்
இந்த நிலவுக்கும் இரவுக்கும்
ஒழித்து விளையாட
கற்றுக் கொடுத்தவர் யார்
ஒரு தரம் நிலவுக்கு பின்னால் இருளும்
மறுதரம் இருளுக்கு பின்னால்
நிலவும் ஒளிக்கிறதே
(குட்டி கவிதைகள்)
0
விதி செய்த சதியால்
வெள்ளையடிக்கப்பட்ட வண்ண ஓவியம் அவள்
மணமாகி சிலநாளில்
தன் பணியை தின்றவளாம்
அயலவர் வாய்க்கு கிடைத்த அவல்
எத்தனை கதவுகள் தட்டி இருப்பாள்
வாசல் கதவுகளினாலேயே
விரட்டப்பட்டாள் அவள்
இப்போதவள் தட்டுவதை நிறுத்தி விட்டாள் நடுராத்திரியில் அதிகமாக தட்டப்படுகிறது அவளின் கொல்லைப்புற கதவு
00
சிவசேகரன் அண்மைக்காலத்தில் புதுக்கவிதைகளாலும் குறும்பாக்களாலும் வாசகர்களை கவர்ந்த வருபவர். எழுத வேண்டும் என்ற துடிப்பு மிக்கவர்.
மட்டை வேலிக்கு தாவும் மனசு அவருடைய முதல் கவிதை நூல். 2017 நவம்பரில் முதற்பதிப்பு பெற்ற வடமராட்சி கிழக்கு கலாசாரப் பேரவையின் வெளியீடு.
இந்நூல் மனசை ஏற்றுக்கொள்கிற சிலிர்ப்புகளைத்தருகிற, படிமச் சித்திரங்களை வரைகிற பல நல்ல கவிதைகளை உள்ளடக்கி இருக்கின்றது என்பதற்கு இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள சில கவிதைகளை எடுத்துக்காட்டுகளாக கொள்ளலாம்.
பின்னட்டைக் குறிப்பில் பரீட்சன் குறிப்பிடுவதுபோல உணர்வுகளை அனுபவங்களை கவிதைகளால் சமூகப் பார்வையோடு எழுதுபவர் எஸ். சிவசேகரன். அவர் எழுத்தாற்றலை இன்னும் வளர்த்துக்கொண்டு சிறந்த படைப்புகளைத் தொடர்ந்து தரவேண்டும் என்பதே நமது அவாவாகும்.
சிவசேகரனுக்கு நமது வாழ்த்துகள்.
-கவிஞர் பாலமுனை பாறூக்-

அருமையான கண்ணோட்டம்
பதிலளிநீக்குThanks...
பதிலளிநீக்கு