என்ர கத -17
என்ர கத - 17
#
எஸ்.சிவசேகரன்
****************
#உடுப்புத்தந்த_உத்தமி
நான் சிவப்பிரகாசத்தில சேர்ந்தவுடன எனக்கு நண்பனானவங்கள் ரெண்டு பேர். (பிறகு கனபேர்) ஒண்டு பவி (எ) உத்தரன் இன்னொண்டு தனா (எ) தனராஜ். எங்கட கொட்டில்ல் இருந்து தனாவின்ர வீடு கிட்ட. ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடம் போகேக்க, கொஞ்சம் வேளைக்கே தனா வீட்ட போய், அவனையும் தம்பியயும் கூட்டிக்கொண்டுதான் பள்ளிக்கூடம் போவம். எப்பிடியும் அரைமணித்தியாலம் வேணும் எங்களுக்கு பள்ளிக்கூடம் போக.. ஆடி அசைஞ்சு, இடையில இலந்தைப்பழம், புளியம்பழம் எண்டு பொறுக்கி திண்டு, ஃபாக்குள்ளயும் போட்டுக்கொண்டுதான் போவம். சிலவேளை பிந்தினால் பிறகென்ன சாத்துத்தான்.
எங்கட கொட்டில் எரிஞ்ச அண்டு ஓடிவந்த ஆக்களில தனாவின்ர குடும்பமும் ஒண்டு. சாப்பாடுகளும் தந்தவயள். தனான்ர அப்பா ஒரு போஸ்ட் மென். அவயள் "தட்டார்" குல ஆக்கள். நான் ஏன் இங்க ஒவ்வொரு சாதியளயும் சொல்லுறனெண்டு கனபேர் யோசிப்பியள். அது ஏனெண்டா, இந்த எல்லாச்சாதியோடயும் இந்த ஏழை #எழுத்தன் மட்டுமே பழகியிருக்கிறேன்; பழகுகிறேன் என்கிற கர்வம் அது.
சரி கதய கேளுங்க,
தனா நான் போன பிறகுதான் பள்ளிக்கூடத்துக்கு வெளிக்கிடுவான். தனான்ர அம்மா, சிலநாள் பள்ளிக்கூடத்துக்கு கொண்டுபோய் சாப்பிடச்சொல்லி கடல, இடியப்பம், புட்டு கட்டியும் தருவா. (2004 மட்டும் இப்பிடியான சம்பவங்கள் நடந்தது)
இப்படி போய்க்கொண்டிருந்த நேரம் எங்கட கொட்டில் எரிஞ்சு போச்சு. புதுசாக்கொட்டில் போட்டும் ரெண்டு நாளா பள்ளிக்கூடம் போகயில்ல. ஒருநாள் (சனிக்கிழமை எண்டு நினைக்கிறன்) காலம தனாவீட்ட விளையாட போனன். அப்பதான் தனான்ர அம்மா கேட்டா "ஏன் நீர் ரெண்டு நாளா தனாவ கூட்ட வரயில்ல?? " எண்டு..
நான் பேசாம இருந்தன். உடன தனா சொன்னான் "அவன்ர கொப்பியள், சேட்டெல்லாம் அண்டைக்கு எரிஞ்சு போச்சாமண." எண்டுகொண்டு விளையாடக்கூட்டிக்கொண்டு போய்ட்டான். விளையாடி முடிஞ்சு வீட்ட போகெக்க தனான்ர அம்மா கூப்பிட்டு ஒரு பைய தந்து
"இதில தனான்ர சேட்டும் காச்சட்டயும் இருக்கு; தோய்ச்சு மினிக்கித்தான் கிடக்கு; பள்ளிக்கூடத்துக்கு போடும்" எண்டு சொன்னா. வேண்ட மனமில்லாம வேண்டிக்கொண்டு வீட்ட வந்தன். அய்யா பேசினார். ஆனாலும் நான் அதை போட்டுக்கொண்டு திங்கள் பள்ளிக்கூடம் போய், பள்ளிக்கூடத்தில அதிபருக்கு சொல்லி துணிவாங்கி சேட்டு காச்சட்டை தைச்சன். ஆனாலும் அந்த அம்மாவின்ர செயல் இப்பவும் என்னை ஆட்கொண்டிருக்கு.
இப்பிடியான காலத்திலதான்
நான் சொன்ன ரெண்டு "சிற்பிகள் என் வாழ்வில வந்திச்சினம்..
அவயள் ஆரெண்டு நாளைக்கு சொல்லுறன்..
00

கருத்துகள்
கருத்துரையிடுக