என்ர கத 20


#என்ர_கத - 20

எஸ்.சிவசேகரன்

#5_ரூபா_பாண்_துண்டு

நான் சிவப்பிரகாசத்தில படிச்ச 2000-2004 காலப்பகுதியில இண்டேவல் சாப்பாடு வீட்ட இருந்து கொண்டுபோய், நாலு பேர் அஞ்சு பேர் சுத்தி வட்டமா இருந்துதான் சாப்பிடுவம். பிறகென்ன சொல்லவே வேணும்; ஆளாளுக்கு அடுத்தவன்ர டிஸ்சில கிடக்கிற சாப்பாட்ட எடுத்து சாப்பிடுவம். அதெல்லாம் ஒரு தனிச்சந்தோசம். விதம்விதமான சாப்பாடு வரும். ஒருத்தன் இடியப்பம், ஒருத்தன் தோச, பயறு, களி, நூடில்ஸ், புட்டு எண்டு ஒவ்வொரு நாளும் சாப்பிடுவம் எல்லாரும்.

நான் அதிகமா பள்ளிக்கூடத்துக்கு கொண்டுபோன சாப்பாடு புட்டும் முட்டைப்பொரியல் & சக்கரை & சம்பல் தான். ஆனாலும் வீட்ட சிலவேளை கொண்டுபோக சாப்பாடு இருக்காது. காலை சாப்பிட்டு போவன். ஆனாலும் பொடியள் விடமாட்டாங்கள். கூப்பிட்டு இருத்தி ஒரு டிஸ் மூடிமுழுக்க எல்லாச்சாப்பாடும் வச்சு சாப்பிடச்சொல்லுவாங்கள். இதெல்லாம் இப்பத்தய பிள்ளயள் அனுபவிக்காத வாழ்வெண்டுதான் நினைக்கிறன்.

சரி கதய கேளுங்க,
எங்களில ஒருத்தன் மட்டும் ஒரு நாளும் சாப்பாடு கொண்டு வரமாட்டான். அவந்தான் பவி (எ)உத்தரன். அவனுக்கு #கன்ரின்லதான் சாப்பாடு. நான் சொன்னானல்லோ நான் சாப்பாடு கொண்டுபோகாத நாள் வருமெண்டு; அப்பவெல்லாம் அதிகமா இவன் தன்னோட கன்ரீனுக்கு கூட்டிக்கொண்டு போய்டுவான். பாண், பனிஸ் வகை, ரொட்டி ரோல், வடை, ரீ, பிளேன் ரீ எண்டு அங்க கிடைக்கும்

அங்க ஒரு சாதுவான ஆள், சாப்பாடு விப்பார். தலையில கொஞ்சம் தான் முடி; அத அப்பிடியே மேவி இழுத்துவிட்டிருப்பார். கன்ரினுக்கு முன்னால அதிகம் பொடியள்தான் நிப்பம். பொம்பிளயள் ஸ்பெசலா பின்னால போய் வாங்குவினம். பிறகென்ன அடிபுடிதான் எப்பவும். சிலவேளை அவர் "போங்கோடா சாப்பாடில்ல" எண்டு கதவ பூட்டின நாளும் இருக்கு. கியூவில் நிண்டு அப்படி நெரிபடுவாங்கள்.

இப்படியான கன்ரினில அதிகம் விலை போற சாப்பாடு பாண் தான். அந்த பாண் எப்படி இருக்கும் தெரியுமோ;
அச்சுப்பாணில அரைறாத்தல் வெட்டி அதயும் அரைவாசியா வெட்டி அதின்ர நடுவில பருப்புக்கறியோ சாம்பாறோ விட்டிருக்கும். ஒரு துண்டு அஞ்சு ரூபா. இப்ப பாண் 60 ரூபா. அப்ப 15 ரூபாத்தான்.
காலம் எவ்வளவு மாறிப்போச்சு.

பவியோட கன்ரீனுக்கு போனால் நான் தான் சாப்பாடு வாங்க போவன். அப்பவே அந்த சாதுவான மனுசர் என்ர மனசில பதிஞ்சார். அவற்ற சிரிப்பும், மென்மையும் என்னை ஆட்கொண்டுது. ஒரு நாள் பதினைஞ்சுரூபா குடுத்து முண்டு பாண் தாங்கோ எண்டன். அவர் நாலு பாண் தந்துவிட்டார். இன்னொரு நாள் கன்ரின் முடியிற நேரம் போக சாப்பாடெல்லாம் முடிஞ்சுது. உடன தான் வீட்ட கொண்டு போக வச்சிருந்த ரெண்டு கறிபணிச எடுத்து தந்திட்டு காசு வாங்கயில்ல. இப்பிடியான மனுசர எப்படி மறக்கமுடியும். அவற்ற உருவம் அப்படியே மனசில பதிஞ்சு போச்சு. அந்த "உன்னத மனிதர்" கவிஞர் ஆர்.திருத்துவராஜா தான்.

இப்படி போனவாழ்வில இன்னொரு திருப்பம் வந்துது. அதென்னண்டு நாளைக்கு சொல்லுறன்..

00

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈழத்து நவீன கவிதைமரபின் "புதிய மாஸ்டர்" கவிஞர் கருணாகரன்

மொழியை வசப்படுத்தி அனுபவங்களை படிமப்படுத்தும் எஸ்.சிவசேகரன் கவிதைகள் -

எஸ்.சிவசேகரன் - கவிதை - அஷிராவின் மடியோடு தொலையும் காலம்