எஸ்.சிவசேகரன் கவிதைகள் - 02



மீளப்பெறுதல்
##

முடிவான ஒரு அந்நியத்தை
மீளப்பெறுதல்
அவ்வளவு எளிதல்ல அஷிரா!

உடைந்த கதிரைகளைப்போல
கிழிந்த தகரங்களைப்போல
சிதைந்த குழாய்களைப்போல
அறுந்த வயர்களைப்போல
மீளத்தருதல் சாத்தியமெனில்

ஒவ்வொரு ஒழுங்கைகளாக
உரக்ககத்திய
வார்த்தைகளை என்ன செய்ய...?

ஒவ்வொரு வாசலிலும்
உமிழ்ந்துவிட்ட
வசைகளை என்ன செய்ய...?

ஒவ்வொரு உடலிலும்
சாத்திவிட்ட
அடிகளை என்ன செய்ய...?

கழுத்தை உரசிய
வாள்கள் கொடுத்துவிட்ட
பயத்தை என்ன செய்ய...?

வார்த்தைகள் கதிரைகளல்ல
வசைகள் தகரங்களல்ல
அடிகள் குழாய்களல்ல
பயம் வயர் அல்ல

அவை நம் அந்நியத்துக்கான
சாசனத்தின் இறுதிச்சரத்துகள்

00


ஏகலைவனின் எச்சம்
*********************

துரோணரே!
யுகம் சில கடந்து
உம்மைக்காண வந்திருக்கிறேன்
தமக்கென்
சிரம்தாழ்ந்த வணக்கங்கள்

எந்தைக்கும் எனக்குமான
மானசீக குருவே!
உம்மால் எல்லைகள் கடந்து
யுகசந்தியாய் அலைந்து அலைந்து
விடையொன்று கண்டு
உம்மிடம் மீண்டேன்..

எந்த யுகத்திலும்
வில்லுக்கு விஜயன் அல்ல.
கர்ணனும் அல்ல..
துரோணனும் அல்ல..
பரசுராமனும் அல்ல..
அவன் சீடன் பீஷ்மனும் அல்ல...

நான்..
நானேதான்..
நான் ஒருவனே..!

இது என்
தலைக்கனத்தின்
வெளிப்பாடுதான் ராஜகுருவே..!

குருவே இல்லாமல்
குறிதவறாத கணைவிடும்
கோமானின் கோமகன் நான்தானே...!?

உமக்கு நான்
தட்சணை எதுவும்
தரப்போவதில்லை..

தமக்குப் பெருவிரல் தந்து
பேதலித்து விடைகொண்ட
நிஷாத ஏகலைவன்
நானில்லை ஆச்சாரியரே..!

நான்...
நான்...

சத்திரிய..., பிராமாண...,
சூத்திர... வஸ்சிய...,
எல்லாம் கலந்த
ஏகலைவனின் எச்சம்..

©
29.05.2020
09.40pm

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈழத்து நவீன கவிதைமரபின் "புதிய மாஸ்டர்" கவிஞர் கருணாகரன்

மொழியை வசப்படுத்தி அனுபவங்களை படிமப்படுத்தும் எஸ்.சிவசேகரன் கவிதைகள் -

எஸ்.சிவசேகரன் - கவிதை - அஷிராவின் மடியோடு தொலையும் காலம்