எஸ்.சிவசேகரன் கவிதை- இரணை மடுவே ஏழாம் கங்கையே -
ஓ பேராறே! நீயா துயில்கிறாய்??
00
கொட்டிய மாரியில்
குதூகலித்து
குமரியாய் குதித்தோடி
ஈர் எட்டடி பாய்ந்து
எம்நிலம் மறைத்த
பேரிளங்குமரியே..!
நீயா துயில்கிறாய்..?
0
காய்ச்சிய கஞ்சியை
வாய் ருசிக்க முன்னர்
பீச்சியடித்த உன்
பெருங்கை நீரினால்
மூச்செடுத்தோடவிட்டு
மூர்க்கமாய் வந்து
எம் நிலம் மூடிவிட்ட நீயா
மூச்சடக்கித் துயில்கிறாய்..?
0
சின்னஞ்சிறுசோடு
சீவனைக் கையில்கொண்டு
தெருவெல்லாம் சிதறி
ஓடவைத்த
ஒப்பற்ற எம்நில ஓவியமே
நீயா இங்கு
சலனமாய் துயில்கிறாய்..?
0
இலங்கைத்தாயின்
மடியில் தவழும்
ஏழாம் நங்கையே..!
இரணைமடுவாய்
விரிந்து கிடக்கும்
வடக்கின் கங்கையே..!
நஞ்சையும் குஞ்சையும்
நாற்புறமும் செழித்து
பஞ்சமென்னும் சொல்லை
பாமரர் மறக்க
தஞ்சமென வந்த
தவத்திரு மகளே..!
சொல்
நீயா நம்மை
அழிக்கப் பொங்கினாய்.?
0
தென்னகம் வந்துந்தன்
தேகம் தழுவிவரும்
தென்றலை சுகித்திட்டு
எம்மிடம் இல்லையே
இந்த எழிலென்று
சந்ததம் சொல்லிடும்
வன்னியின் எழிலியே..!
சொல்
நீயா நம்மை
அழிக்கப் பொங்கினாய்?
0
மூவாயிரம் ஆண்டு
மூத்த எம் குடிகளின்
நிறமூர்த்தமெல்லாம்
நெஞ்சுக்குள் நிறைத்துள்ளாயாம்..;
பேய்களும் சிலது எம்மை
பீடிக்க வந்தபோது
நாலரண் அமைத்து நீயும்
காவலாய் மறைத்துள்ளாயாம்..!
சொல்
நீயா எம்மை
அழிக்கப் பொங்கினாய்..?
0
உன்னில் ஊத்தை
அரசியல் சாக்கடை
கலந்து சிலபேர்
களிக்கத் துடிக்கிறார்..
சொல்லிவிடுகிறேன் உனக்கொன்று
அண்டியும் போகதே
ஆவாய் நீயும் நாற்றச் சாக்கடை
சொல் குமரியே..!
நீ செய்தது நியாயம்தானா..?
வேண்டாம்
பொங்கியெழுந்தெம்மை
புலம்பவிடுவது
இனியும் வேண்டாம்..
துயில் கொள்
ஆழத்துயில் கொள்..!
உன் நெஞ்சில் புதைந்துள்ள
என் முப்பாட்டன்
நிறமூர்த்தம் அழிக்க
வஞ்சகன் ஒருவன்
வாஞ்சையோடுன்னை
வணங்கி வருவான்
அப்போது விழித்துக்கொள்..!
என் பாட்டனை எழுப்பி
அப்போதே அவனை
அழித்துக் கொல்..!
00
எஸ்.சிவசேகரன்
-2019-
{இரணைமடுக்குளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்குப் பின்(சென்ற ஆண்டு - மார்கழி) இரணைமடுக் குளத்தை தரிசித்த போது -02.01.2019 எழுதியது}


கருத்துகள்
கருத்துரையிடுக