சிவசேகரன் கவிதைகள்

 



01.பரகசியமாய் போன நேசம்

***************************


நேற்றைய கனவின் இடையில்

உன் நலத்தை அவாவிய

எனது நேசம்மீந்த விசாரிப்பை

காற்றின்

காதிலல்லவா சொல்லியிருக்கிறாய்..!


அதோ பார்

காடு மலையெல்லாம் கடந்து பரவிக்கொண்டிருக்கிறது

பரகசியமாய் போன எனது நேசம்..


என்ன செய்வாய் இனி..?


ஒன்றில்

என்னை நீ

மீண்டும் சிறையிட்டு விடு;


அன்றில்

என் கவிதையை தீதென்று

காற்றிடமே முறையிட்டு விடு..!

00

2019


02.ஆறாகி ஓடும் முதலைகளின் கண்ணீர்

*************************************

இனி எதுவும் சாத்தியமில்லை

என்றான பிறகு

தன்னைச் சமாதானம் செய்ய

முதலைக்கண்ணீர் வடிப்பதாக

முகத்தை உம்மென்று வைத்தபடியே

முணுமுணுக்கிறாள் அஷிரா..

0

ம்ம்..

இனி எதுவும் சாத்தியமில்லை


குழந்தைகள் மீது பொழிந்த

குண்டு மழையை..

ஏவிய எரிகணைகளை..

சபித்த சொற்களை..

கொடுத்த சித்திரவதைகளை..

பறித்த உயிர்களை எல்லாம்

திரும்பப்பெறுதலும்

திரும்பத்தருவதும் சாத்தியமே இல்லை..

0

ஆனாலும்

அன்றொருநாளில்

கடலோடு மிதந்த உடல்களைக்கண்ட

மழைக்குளத்து முதலைகள்

ஓலமிட்டு அழுது 

தமது கண்ணீரை ஆறாகப்பெருக்கி

கடலோடு கலக்கவிட்டு

உடல்களையெல்லாம்

குளத்துக்குள் இழுந்து வந்து

ஏப்பம் விட்ட கதை

பாவம்

அவளுக்குத் தெரியாது..


-2019


03.குழந்தைகள் வாழமுடியாத பூமி

************************************


பிறந்தநாள் பரிசாகக் கிடைத்த

சித்திரக்கொப்பியையும்

அற்லஸ் கலர்பெட்டியையும்

தூக்கிக்கொண்டு வந்து

தன் குட்டிக்கதிரையில் அமர்ந்தபடி

ஆழ்ந்த யோசனையோடு

கறுப்பு மஞ்சள் கலந்த

வட்டமொன்றை வரைந்துமுடித்த அஷிரா

அதற்கு தலைப்பிட்டிருந்தாள்

"இது

குழந்தைகள் வாழமுடியாத பூமி" என்று..


-2019



04.கொலைசெய்யும் பொம்மைகள்

*******************************


சூப்பர் மார்கெட்டிலும்

கோவில் திருவிழாக்களிலும்

சுற்றிச்சுற்றி வேடிக்கை பார்க்கும்

குழந்தைகளை

கண்சிமிட்டி அழைத்து

தம்மை கட்டிப்பிடிக்கச்சொல்லி

காதோரம் எதையோ

கிசுகுசுக்கும் பொம்மைகள்

குழந்தைகளின் மடிகளிலமர்ந்தே

வந்துவிடுகின்றன வீடுகளுக்குள்..

0


கண்ணாம்பூச்சி தொடங்கி

திருடன் போலீஸ் வரை

எல்லா விளையாட்டுகளையும்

தெரிந்து வைத்திருகின்ற பொம்மைகள்

சிலவேளை குழந்தையாய்

சிணுங்கவும் கற்றுவைத்திருக்கின்றன

0


குழந்தைகளின்

பிஞ்சுக்கைகளின் அணைப்பில்

உறங்கிக்கிடக்கும் பொம்மைகள்

இரவின் இரண்டாம் சாமத்தில்

மீந்துபோன கோபத்தில் எழுந்துபோய்

கொலைகள் செய்துவிட்டுத்திரும்பி

பிஞ்சுகைகளின் அணைப்பில்

மீண்டும் உறங்கிக்கொள்கின்றன..

0


நேற்று நடந்த கொலைகள் பற்றி

ஏதும் அறியாமல்

திருவிழாவில் அடம்பிடித்து வாங்கிய

சூக்கி பொம்மையை

இறுக்கி அணைத்தபடியே

உறங்கிக்கொண்டிருக்கிறாள் அஷிரா..

00


-2019


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈழத்து நவீன கவிதைமரபின் "புதிய மாஸ்டர்" கவிஞர் கருணாகரன்

மொழியை வசப்படுத்தி அனுபவங்களை படிமப்படுத்தும் எஸ்.சிவசேகரன் கவிதைகள் -

எஸ்.சிவசேகரன் - கவிதை - அஷிராவின் மடியோடு தொலையும் காலம்