சிவசேகரன் - கவிதை
அம்மாவின் மழை
#
எப்போதும் எங்களில்
கனிந்துருகும் அம்மா
மாரியில் மட்டும் எரிந்து விழுந்தும்
தன்னளவில் யார் யாரையோ வசை பாடியும்
அங்குமிங்கும் அசைந்து கொண்டே
இருப்பாள்
ஒழுக்குக்கு சட்டியை வைத்தபடி
ஒரு வசையையும்
இன்னொரு வசை சொல்லிக்கொண்டு கொட்டிலில் இருந்து
அரை நனையல் விறகையும்
அடுத்த வசையில்
தன் விதியையும்
கடைசியில் எங்களையும் வசைப்பாடுவாள்
மழை முடியும் வரை
வசைகளையும்
தலையில் போட்ட
சொப்பின் பையையும்
அம்மா விடுவதில்லை
ஒவ்வொரு மாரியிலும்
அம்மா ஒன்றையே சொல்லிக் கொண்டிருப்பாள்
இந்த மழை ஒரு சனியன்
ஒரு கொடுமாரிக்குளிரில்
அம்மாவின் அசைவு நின்றபோது
நாங்கள் எல்லோரும்
முதலும் கடைசியுமாய்
வாசைபாடிக்கொண்டே
நனைந்தோம் மழையில்..
இதோ
இந்த மாரியில் கொட்டித்தீர்க்கும் மழையையும்
அம்மா வீட்டில் எங்கோ இருந்து
வசைபாடிக்கொண்டே இருக்கிறாள்
00
10.00pm
கருத்துகள்
கருத்துரையிடுக