சிவசேகரன் கவிதைகள்
//
1
விடுதலையென்பதும்
வாழ்தலென்பதும்
விதியிலா முடிவிலா?
ருமழையும்
மெல்லிசையும்
புத்தகங்களும்
ஒரு நாயும்
சில முத்தங்களுமே
உனது விடுதலை வாழ்வின்
திறவுகோல்களெனின்
உனது வாழ்தலென்பது என்ன?
மறவாதே
கூண்டுப்பறவைகள் பறப்பதற்கு
இன்னும் காலம் இருக்கிறது
கூடற்ற பறவைகளுக்கு
காலமே பறப்பதற்கென்று இருக்கிறது
0000
2
ஒரு காலத்தின் சாட்சியெனப்படுபவன்
பேச வரும்போது
அறையை நிரப்புகிறது
சலனம்
ஒரு வணக்கம் சொல்லிவிட்டு
அவன் உதிர்க்கும்
அடுத்த வார்த்தைகள் ஒவ்வொன்றையும்
முறித்து முறித்து அனுப்புகிறது
மழையின் இரைச்சல்
கனவு
பிரிவு
தோல்வி
வலி
வன்மம்
காயம் யாவையும்
காலம் தவறாமல் பேசிமுடித்து
அமரும்போதுதான் கவனித்தேன்
அவன் தலையில் சூடியிருந்தான்
காலக்கிரீடத்தை..
000
3
நீ
கடைசியாக ஒருமுறை
என்னைக் கேட்டிருக்கலாம்
அல்லது நமது
ஒரு பயணத்தையாவது
எனக்கு நினைவுபடுத்தியிருக்கலாம்
இல்லை
செத்துவிடுவேன் என்றாவது
பொய் சொல்லி இருக்கலாம்
அப்போதெனும்
கருணை அவஸ்தையிலிருந்து நீயும்
தனித்த இருளிருந்து நானும்
விடை பெற்றிருக்கலாம்
000
4
நான் ஏன் மீண்டும் மீண்டும்
உன்னையே
காதலிக்கிறேன்
கைவிடுகிறேன்
அழவைக்கிறேன்
நாம் இருவரும் சபிக்கப்பட்டிருக்கிறோம்
நீ
மீண்டும் மீண்டும்
கருணையின் வடிவமாகவும்
நான்
மீண்டும் மீண்டும்
மிருகத்தின் வடிவமாகவும்
இதோ
மீண்டும் உன்னை
காதலிக்கிறேன்
0000
2021
கருத்துகள்
கருத்துரையிடுக